பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணாக்கரின் பசி மயக்கம் 151 "வறுமை, மலையாள மாவட்டத்தின் சில ஊர்களைப் பற்றியுள்ள நோய் அல்ல! இம் மாவட்டத்தோடு முடங்கிவிடும் கேடு அல்ல! சென்னை மாகாணம் முழுவதிலும் ஒவ்வோர் ஊரையும் தாக்கும் பெருநோய். “பொது மக்கள், அவர்களின் தலைவர்கள் முதலியோர் மாணாக்கரைப் பட்டினியிலிருந்து விடுவிப்பதைப்பற்றிச் சிந்தனை செய்வார்களாக!” நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து பொங்கிய உணர்வுகள் உந்த, எனது ஆங்கில உரை தங்குதடையின்றி, வெள்ளம் என, ஒரு மணிநேரம் ஒடிற்று. அவையோர் உணர்வுகள் கிளரப்பட்டதை அவர்களுடைய முகங்கள் அவ்வப்போது காட்டின. மறுநாள் காலை சென்னை வந்து அடைந்தேன் அருமை மைந்தன் திருவள்ளுவன் ஓடிவந்து, காலைக் கட்டிக் கொண்டே என்னை உள்ளே அழைத்துச் சென்றான். அடுத்த நொடி, அன்றைய இந்து நாளிதழின் நடுப்பக்கத்தைத் திறந்து காட்டினான். கண்டது என்ன? என்னுடைய பாலக்காட்டு உரை, கவனத்தைக் கவரும் வண்ணம் நடுப் பக்கத்தில் வெளிவந்திருக்கக் கண்டேன். சில வரிகளோடு முடிந்ததா செய்தி? இல்லை, முக்கால் 'காலம் நீண்டது. அதைப் படித்தேன்! நிறைவு கொண்டேன். ஏன்? எனது பேச்சின் உயிர், அந்தச் செய்தியில் இருந்தது. அரசு அலுவலர் ஒருவருடைய பேச்சுக்கு, நடுப் பக்கத்தில் முக்கால் காலம் இந்து'வில் இடங்கொடுப்பது, எப்போதோ ஒரு முறையே, அதன் முக்கியத்துவத்தால் நிகழக்கூடிய ஒன்றாகும். அச் சிறப்பினை அப்போதே எனக்குச் செய்த இந்து', பிற்காலத்தில் - எனது துணைவேந்தர் பதவிக் காலத்தில் - மீண்டும் அத்தகைய பெருமையைச்செய்ய வாய்க்கும் என்ற கனவுகூட நான் 1956 ஆம் ஆண்டில் காணவில்லை. சென்னைக்குத் திரும்பியதும் பலர் என்னோடு தொடர்பு கொண்டார்கள். என்னைப் பாராட்டினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/200&oldid=787985" இலிருந்து மீள்விக்கப்பட்டது