பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகல் உணவுத் திட்டத்துக்காகப் பிச்சை எடுக்கவும் தயார் 239 அவ் வூரிலும் மன்னர் நடத்தி வந்த தொடக்கப் பள்ளியில் தொடங்குவது என்று அனைவரும் ஒப்புக் கொண்டனர். அப்படியே ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இந்தச் சூழ்நிலையில் ஒருநாள் முற்பகல், கோட்டையிலிருந்த முதலமைச்சர் என்னை அழைத்தார். உடனே சென்று கண்டேன். “எட்டயபுரம் மன்னர் தொடக்கப் பள்ளியில் முதல் பகல் உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைக்கணும். அதற்கான நாளையும் நேரத்தையும் அவரைக் கலந்தே ஏற்பாடு செய்தார்கள். "அப்படிச் செய்த பிறகு, ஒரு பெரிய வழக்கு பற்றி, அந்தக் குறிப்பிட்ட நாளன்று அவர் சென்னையில் இருக்க வேண்டியதாக இருக்கிறது. அறிவித்த நிகழ்ச்சியைத் தள்ளிப் போடுவதற்கு அரசர் விரும்பவில்லை. “ஒரு நாள் முன்னதாகவே நடத்தி வைக்கும்படி என்னைக் கேட்கிறார். அவர் கேட்கிற அந்த முந்திய நாள், நான் சென்னையில் இருந்தாக வேண்டும். “இந்தத் தர்மசங்கடமான நிலையில், நானோ உங்களைக் கேட்காமல், உங்களை அனுப்பி வைப்பதாகவும், உங்களைக் கொண்டு, பள்ளிக்கூட அன்னதானத்தைத் தொடங்கி வைக்க ஏற்பாடு செய்கிறேன் என்றும் கூறியுள்ளேன். "நீங்கள் ஒரு நாள் முன்னதாகச் சென்று அந்த நல்லசெயலைச் செய்து வையுங்கள். திட்டமிட்டபடி, அடுத்த நாளிலிருந்து நான் அங்கு வந்து சேர்ந்து கொள்ளுகிறேன். நீங்களும் என்னுடன் வாருங்கள்” என்றார். “தாங்கள் வாக்குக் கொடுத்துவிட்ட பிறகு, நான் எப்படி மறுப்பது? தாங்களே வர முடிந்தால், நிறைவாயிருக்கும்: திட்டத்திற்கும் தக்க ஆதரவு கிடைக்கும்” என்று கூறினேன். “இப்ப மட்டுமென்ன? முதலில் நான் விரும்பியபடி நடக்கிறது. அடுத்த மூன்று-நாள்கள் பெரும்பாலும் பகல் உணவு தொடங்கும் நிகழ்ச்சிகள் தானே - அப்புறமும் எத்தனையோ ஊர்களுக்கு வந்து தொடங்கப் போகிறேன்” என்றார் முதலமைச்சர். நான் என்ன சொல்ல முடியும்? போக மாட்டேனென்று சொல்ல உரிமை ஏது? ஆணையை ஏற்றுக் கொண்டேன். காமராசர் மனம்போல், எட்டயபுரத்தில் - பாரதி பயின்ற தொடக்கப் பள்ளியில் - தொடங்கி வைத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/278&oldid=788064" இலிருந்து மீள்விக்கப்பட்டது