உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 நினைவு அலைகள் பலர் முன்னிலையில், தட்டிக் கொடுக்கும் யுகப் புரட்சியையும் கண்டுவிட்டன, என் கண்கள். 'முழங்கு சங்கே முழங்கு சமத்துவச் சங்கே முழங்கு' என உள்ளம் துள்ளும் வேளை, மற்றோர் புரட்சி, என் மனக் கண்ணில் மின்னிற்று. காஞ்சிபுரத்திற்கு அருகாமையில் ஒரு செழிப்பான ஊர்; தொண்டை வளநாடு என்பதை மெய்ப்பித்துக் கொண்டிருந்த நல்லூர், தென்னந்தோப்புகள் சூழ்ந்த வயல் கொழிக்கும் சிற்றுார். இந் நூற்றாண்டுகளின் முப்பதுகளில், உதவிப் பஞ்சாயத்து அலுவலராக நான் அவ் வூருக்குச் செல்ல நேர்ந்தது. ஊராட்சிக் கணக்கு வழக்குகள் சீராக இருந்தன. பகல் உணவு வேளை வந்தது. சாப்பிட அழைத்தார் ஊராட்சித் தலைவர். அவர் ஒர் அய்யங்கார்; அப்போது தனியே குடியிருந்தார். இருப்பினும் விருந்தோம்பல் உணர்வால் உந்தப்பட்டு, அவரே சமையல் செய்து, எனக்கு உணவு ஆயத்தமாக்கிவிட்டார். நானும் உண்ண இசைந்தேன். இலை போட்டு அழைத்தார். எங்கே? வீட்டின் உள் தாழ்வாரத்தில். அது சுறுக்கென்று தைத்தாலும் அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர், பட்டபாடு, என் எரிச்சலைப் போக்கிற்று. உண்டுவிட்டே சென்றேன். இருபது ஆண்டுகள் கழிந்த் பிறகு, மீண்டும் அவ் வூருக்குச் செல்ல வாய்த்தது. “எங்கள் டைரெக்டர்தான் வந்து, பகல் உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைக்க வேண்டும்” என்று அப் பெரியவர் வற்புறுத்தி னாராம். எனவே, மாவட்ட அலுவலர் இரயான், என்னை அங்கே அழைத்துப் போனார். பழைய பெரியவர், முன்னின்று பகல் உணவு விழாவைச் செம்மையாக நடத்திக் கொடுத்தார். பிறகு, எங்களைத் தம் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். எல்லோருக்கும் வீட்டுக் கூடத்தில் இலை போட்டு விருந்தளித்து, வாழ்த்தி வழி அனுப்பினார். எத்தனை இடங்களில் இப்படிச் சமத்துவம் தானே கனிந்தது வாய்ப்புக் கருக்களைப் போற்றி வளர்க்கிறோமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/309&oldid=788098" இலிருந்து மீள்விக்கப்பட்டது