பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமத்துவச் சங்கின் முழக்கம் கேட்டேன் 273 'ஏழைகளுக்கு உணவளித்துப் படிப்புச் சொல்லிக் கொடுப்பது மனிதாபிமானத்தையும் அறத்தையும் அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளாகும். “ஆகவே, பள்ளிக்கூடப் பகல் உணவுத் திட்டத்திற்கு, திருச்சபையைச் சேர்ந்தவர்கள் எல்லாவிதமான உதவிகளையும் செய்யவேண்டும்” என்று அந்தச் சுற்றறிக்கை கூறிற்று. புலால் உணவு; இசுலாமியர்கள் உதவி ஆங்காங்கே உள்ள இசுலாமியர்கள் உதவி செய்யப் பின்னடையவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் கேம்பலாபாத் என்றோர் ஊர் உள்ளது. அந்த ஊரில் பகல் உணவுத் திட்டத்தைத் தொடங்க ஏற்பாடு செய்தார்கள். தொடக்க நாளன்று எல்லோருக்கும் புலால் உணவு அளித்தனர். அதற்குமுன் நின்றவர் சென்னை புகாரி ஒட்டல் உரிமையாளரும், கேம்பலாபாத் ஊரைச் சேர்ந்தவருமான திரு. புகாரி ஆவார். அவர், எங்களுக்குத் தனியாக, ஒர் அய்யரைக் கொண்டு, தாவர உணவு செய்து வைத்திருந்தார். நிகழ்ச்சி நெரிசல் காரணமாக, பிள்ளைகளுக்கு உணவுப் பொட்டலத்தை மதுரை மண்டல ஆய்வாளர், திரு. மகமதுகனி, பரிமாற முடிந்ததே ஒழிய, நாங்கள் இருந்து உண்ண இயலவில்லை. இந்துக்கள் உதவி: குன்றக்குடி அடிகளார் பகல் உணவுத் திட்டத்தைப் பரப்புவதில், தவத்திரு குன்றக்குடி அடிகளார் காட்டிய ஈடுபாடு பெரிது; எடுத்துக் கொண்ட முயற்சி போற்றத்தக்கது. திருப்பத்துார், பிரான்மலைப் பகுதிகளில் அடிகளார் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி, பள்ளிப் பகல் உணவுத் திட்டம் நடக்க ஏற்பாடு செய்தார். விழாக்களுக்கு என்னை அழைத்தார். அருள்மறையாளர் ஒருவர் இறங்கி வந்து, சமுதாய மக்களுக்கு நற்றொண்டு புரிய முயல்வது, என் உள்ளத்தை உருக்கிற்று. எனவே, பலமுறை அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டு, அந்தப் பெரிய கர்மயோகியோடு பல ஊர்களுக்குப் போகும் பேறு பெற்றுள்ளேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/312&oldid=788102" இலிருந்து மீள்விக்கப்பட்டது