உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 நினைவு அலைகள் பயணத்திற்கு வேண்டிய அனைத்தையும் எண்ணிப் பார்த்து, எடுத்து வைத்துக் கொண்டார்களா என்று இரண்டாம் பேருக்குத் தெரியாமல் சரியான ஏற்பாடுகளைச் செய்து விடுதலில், மிகச் சிறந்தவர், குன்றக்குடி அடிகளார். ஒரு முறை பிரான்மலையில் பகல் உணவு விழாவை முடித்துவிட்டு, அடிகளார் காரில் அடுத்த ஊருக்குச்சென்றோம். பிரான்மலை ஊரை விட்டு நீங்கியதும், மக்கள் கண்களில் படாத தொலைவில் மரத்தடியில் கார் நின்றது. “என்ன பழுது?” என்று கேட்டேன். “ஒன்றுமில்லை” என்றார், காரோட்டி. அடுத்த நொடி அடிகளாரின் தனி உதவியாளர், என்னிடம் ஒரு குவளை ஆரஞ்சுச் சாற்றையும் அடிகளாரிடம் மற்றொன்றையும் நீட்டினார். “பகல் சாப்பாடு எத்தனை மணி ஆகுமோ! இதைப் பருகினால் அதுவரை தாங்கலாம்” என்று வணக்கத்திற்குரிய அடிகளார் கட்டளையிட்டுக் களைப்பைப் போக்கினார். அடிகளாரின் அன்பு பலமுறை என் அயர்வைப் போக்கிற்று. என்னே அடிகளாரின் கனிவு! 32. காஞ்சியில் ஆதாரக் கல்வி மாநாடு வினோபாவின் பூமிதான இயக்கம் * உலகம் தொன்மையானது. வறுமையும் அவ்வளவு தொன்மையானது எனலாம். மாந்தர் தோற்றத்தின்போது, இயற்கை வளங்கள் கொழித்திருந்தன. அவற்றைக் கொண்டு, விளைச்சலையும் பயன்படு பொருள்களையும் உருவாக்கும் திறன் மாந்தர் இனத்தோடு பிறந்தது அல்ல. நம் முன்னோர் ‘அரும்பாடுபட்டுக் கற்ற கலைகள் வேளாண்மையும் தொழில்களும் ஆகும். இந்தியர்களில் மிகப் பெரும்பாலோர் பயிர்த் தொழிலை நம்பி வாழ்பவர்கள். குடிமக்கள் எண்ணிக்கை பெருகின அளவுக்கு, விளைநிலம் பெருகவில்லை; பெருகவும் இயலாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/313&oldid=788103" இலிருந்து மீள்விக்கப்பட்டது