பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 நினைவு அலைகள் அதிலிருந்து இறங்கிய நான், தெருக்கோடியைத் திரும்பிப் பார்த்தேன். என் மாமனார் திருவாரூர் சுப்பிரமணியம் மூலையிலிருந்த பாலத்தின்மேல் அமர்ந்து இருக்கக் கண்டேன். என்னுடைய காரை, அங்கிருந்தபடியே கண்ட அவர், கைகளை ஆட்டியபடியே, எழுந்து, குத்துசி குருசாமி வீட்டிற்குள் சென்றார். நான் இதைக் கவனித்த்படி என் இல்லத்திற்குள் நுழைந்தேன். எங்க வீட்டு வேலைக்காரப் பையன் தாத்தாவுக்கு (திரு. சுப்பிரமணியத்திற்கு காப்பி எடுத்துக்கொண்டு சென்றான். சில மணித் துளிகளே ஓடின. நான், முகம் கழுவிக் கொண்டிருந்தேன். காப்பி எடுத்துக்கொண்டு போன பையன், 'அம்மா, அம்மா, தாத்தா, பேச்சு மூச்சில்லாமல் இருக்கிறார், அம்மா” என்று கூவிக் கொண்டு என் வீட்டிற்குள் நுழைந்தான். எனக்கு முன்னே, காந்தம்மா, பதறி அடித்துக்கொண்டு ஒடினார். பக்கத்து வீடுகளிலிருந்து துணைக்குச் சென்றார்கள். கண்டது என்ன? என் மாமனார் மறைந்துவிட்டார்: படுக்கையில் கிடந்து அவதிப்படாமல் இறந்துவிட்டார். ஒர் ஆண்டிற்குள், எங்களுக்கு இரண்டாவது இடி காந்தம்மாவின் அக்காள் திருமதி குஞ்சிதம் குருசாமியும் அவரது கணவரும் தன்னேரிலாத நையாண்டி எழுத்தாளரும் கனல்கக்கும் பேச்சாளருமான திரு. குத்துசி குருசாமியும் தஞ்சை மாவட்டம் பேராவூரணிப் பக்கம் சுற்றுப்பயணம் சென்று இருந்தார்கள். பல ஊர் நண்பர்களோடு தொடர்பு கொண்டபின், குருவிக்கரம்பை வேலு வீட்டில் இருந்த இவரோடும் தொடர்புகொள்ள முடிந்தது. அதிர்ச்சி தரும் மரணச் செய்தியைக் கூறிவிட்டு இறுதிச் சடங்கு பற்றிக் கேட்டோம். அவர்கள் சென்னை வந்து சேர பிற்பகல் ஆகுமென்று தெரிந்தது. எனவே, மறுநாள் மாலை எரியூட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. மூத்தவர்கள் இல்லாததால், நானும் காந்தம்மாவும், அவரது தங்கை வெங்கடேசம்மாளும் ஒரே தம்பி புருடோத்தமனும் துக்கம் விசாரிக்க வந்தவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/443&oldid=788246" இலிருந்து மீள்விக்கப்பட்டது