உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடியரசுத் தலைவர் கலந்து கொண்ட மாநாடு 407 அத்தனையும் சேர்ந்து, எல்லா மாவட்டச் சாதனைகளையும் காட்டும் தகவல் தொகுப்பு அறிக்கை அரசுக்கும் மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கும் போகும். அதில் இரகசியமில்லை. எனவே, குறிப்பிட்ட கூட்டத்தில், திருச்சி மாவட்டக் கல்வி அலுவலர் திரு. வெங்கடவரதன், திருச்சி மாவட்டத்தின் சாதனைப் புள்ளி விவரங்களை எடுத்துரைத்தார். கூட்டத்தில் இருந்த சில அலுவலர்கள் நம்பவில்லை. திரு. வெங்கடவரதன், மாநிலப் புள்ளி விவரங்களையே படித்து தமது கல்வித் துறையின் பெருமையை வெளிப்படுத்துவதற்கு முயன்றார். - மாவட்டக் கல்வி அலுவலருக்குப் பெருமை சேர்க்க விரும்பாதவர், பெரிய கல்வி அதிகாரிக்குப் பெருமை சேர்த்துவிட்டார். அந்தப் பொய்யை அடிப்படையாகக் கொண்டு, அமைச்சரோடு போராட வந்துவிட்டார், மேலவை உறுப்பினர் ஒருவர். தமிழர்களாகிய நாம் நாள்தோறும் எத்துணை நிழல்களோடு போராடிப் போராடி வீணாகிறோம்! வேலூர் மாநாட்டிற்குச் செல்வோம். பந்தல், அலங்காரம் முதலியன உரிய நேரத்தில் முடிந்தன. ஆசிரியப் பெரும்படை பன்னிரண்டு இலட்சம் ரூபாய்களுக்கு நன்கொடைகளைத் திரட்டிவிட்டது. அவற்றில் அசையும் பொருள்களை, மாநாட்டிற்குக் கொண்டு வந்தனர். மேடைக்கு இருமருங்கிலும் நூறு அடிகளுக்குமேல் ஆறு அடுக்குகள்வரை, பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டன. சமையல் பாத்திரங்கள், குடிநீர்ப் பாத்திரங்கள், உண்ணும் தட்டுகள், சீருடைகள், பாடத் துணைக்கருவிகள், ஒவ்வொரு தொடக்கப் பள்ளிக்கும் நூலகங்கள் ஆகியவை கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தாயின. மாநாட்டுக்கு முதல்நாள் இரவே பொருள்களை அடுக்கும் வேலையைத் திறமையாக முடித்துவிட்டார்கள். எனவே, காலை முதல் பொதுமக்கள் வந்து வேடிக்கை பார்த்தபடி இருந்தனர். ஆசிரியத் தொண்டர்கள், அப் பொருள்களை, கண்ணினைக் காக்கும் இமை எனக் காத்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/446&oldid=788249" இலிருந்து மீள்விக்கப்பட்டது