பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 நினைவு அலைகள் கல்வித் துறைக்குக் குடியரசுத் தலைவரின் பாராட்டு 12-8-1960 காலை, குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத் காட்பாடி புகைவண்டி நிலையம் வந்து சேர்ந்தார். அமைச்சர் மாணிக்கவேலு அவரை வரவேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கேலு எராடிக்கு அறிமுகப்படுத்தினார். அவர் என்னையும் பிற அலுவலர்களையும் அறிமுகப்படுத்தினார். பள்ளிச் சீரமைப்பு மாநாடு தொடங்குவதற்கு ஒரு மணி முன்னதாக, முதலமைச்சர் காமராசர், எவருக்கும் தெரிவிக்காமல், மாநாட்டுப் பந்தலுக்குள் வந்தார். அப்போது நான் அங்கே இருப்பதைக் கண்டு அவர் திகைத்துப் போனார். "கூட்டம் நிறையுமா என்று பார்க்க வந்தேன். பந்தல் நிரம்பிவிடும்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார். குடியரசுத் தலைவர் நேரந் தவறாது, மாநாட்டிற்கு வந்து சேர்ந்தார். கடல் எனத் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தைக் கண்டு மகிழ்ந்தார். மேடையேறியதும் இரு பக்கங்களிலும் பார்த்துப் பூரித்தார்; "நன்கொடைகளின் மதிப்பு எவ்வளவு இருக்கும்?” என்று வினவினார். “ஏழெட்டு இலட்சம் ரூபாய் இருக்கலாம்” என்று கல்வி அமைச்சர் ஆங்கிலத்தில் பதில் கூறினார். முதலமைச்சர் குறுக்கிட்டார், "நோ நோ டுவெல் லேக்ஸ்” என்று ஆங்கிலத்தில் திருத்தினார். அதாவது இல்லை இல்லை: பன்னிரண்டு இலட்சம் என்று முதல் அமைச்சர் சொன்னார், கல்வி அமைச்சர், "ஆம்" என்றார். மாநாட்டு நிகழ்ச்சி நிரல் கச்சிதமாக நிறைவேறியது. குடியரசுத் தலைவர், பரவசத்தோடு உரையாற்றுகையில், "இந் நூற்றாண்டின் முப்பதுகளில் மகாத்மா காந்தியோடு நானும் சேர்ந்து. பீகார் மாகாண மக்களைத் தட்டியெழுப்பி அவர்களைக் கொண்டே, நாட்டுப் புறங்களைச் சீரமைக்க முயன்றோம். "அதே வகையான நடவடிக்கைகளைச் சென்னை மாநிலத்தின் கல்வித்துறை, மாநிலம் முழுவதும் வெற்றிகரமாகத் தூண்டி’ வருகிறது. அதற்காக அந்தத் துறையைச் சேர்ந்த அனைவரையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்” என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/447&oldid=788250" இலிருந்து மீள்விக்கப்பட்டது