உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்மபூஷன் பத்ம ஆயிற்று I 419 "ஏன்? உடம்புக்கு என்ன?’ என்று கேட்டார். “உடம்புக்கு ஒன்றுமில்லை அய்யா! தாங்கள் நடத்தி வரும் பகல் உணவுத் திட்டத்தை வெறும் சோறு போடும் நடவடிக்கையாகக் கொள்ளாமல் சீருடை இயக்கத்தை வெறும் புண்ணியம் தேடும் முயற்சியாகக் கொள்ளாமல், “பள்ளிச் சீரமைப்பு இயக்கத்தை, நன்கொடை திரிட்டும் இயக்கமாக நடத்தாமல், “பழைய அறவுணர்ச்சிக்குப் புதுவாய்க்கால்களும் புது உருவமும் கொடுத்து, சமுதாய மறுமலர்ச்சிக்கு விதைகளாகக் கொண்டு இருக்கிறோம். இதை அய்யாவும் போற்றியுள்ளீர்கள். “வெள்ள அழிவு - வறட்சிப் பஞ்சம் போன்ற நெருக்கடிகளுக்கு, அயல் நாடுகளிலிருந்து உணவு உதவி பெற்றால் பரவாயில்லை. “தொழில் நுட்ப உதவிபெற வேண்டியவர்களிடம் சாப்பாட்டுக்கு உதவி பெறுவது நல்லதல்ல என்று எண்ணினேன். எனவே, என் முகம் வாடிவிட்டது” என்று விளக்கம் கூறினேன். "நீங்கள் சொல்வதில் தப்பு இல்லை. மக்களாட்சி என்பதன் பொருள் மக்கள், சமுதாயப் பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதே, அதற்கு மாறாகச் செய்வது, நல்லதல்ல” என்றார், அமைச்சர். 'அய்யா! தாங்கள் உதவியை ஏற்றுக் கொண்டீர்கள் அதிலிருந்து பின்னடைவது நல்லது அல்ல. உதவியின் அளவைப் பற்றி வாக்குறுதி கொடுக்காதிருந்தால், அமெரிக்கரின் நல்லெண் ணத்தின் அடையாளமாக, மாதத்திற்குப் பதினைந்து நாள்களுக்கு ஒருநாள் மட்டும் அமெரிக்க உதவியை ஏற்றுக்கொள்வது என்று சொல்லிவிடுங்கள்” என்றேன். அதற்கு இசைந்த, முதல் அமைச்சர், 'இவ் வுதவியைப் பெற்று, பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைத்துக் கணக்குச் சொல்லும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எனக்குத் திருப்தியாக இருக்கும்” என்று கூறினார். “அரசின் திட்டங்களை உண்மையாக நிறைவேற்றுவது எனது பொறுப்பு, அய்யா' என்றேன். அதற்கு ஒரு திட்டம் தீட்டிக்கொடுக்கக் கட்டளையிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/458&oldid=788262" இலிருந்து மீள்விக்கப்பட்டது