பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமதி குஞ்சிதம் குருசாமி மறைந்தார் - 473 எப்படியோ சமாளித்துக்கொண்டு, அன்று காலை நானும் என் மனைவியும் நெய்யாடுபாக்கம் சென்றோம். நான் பெற்ற விருதினையும் விருது பெறும்போது எடுக்கப் பட்ட புகைப்படத்தையும் தந்தையிடமும் மாமாவிடமும் காட்டினேன். அவர்கள் பார்த்து மகிழ்ந்ததோடு மாமியும் பார்த்து மகிழ்ந்தார். பகலுணவு அருந்திவிட்டுச் சென்னைக்குத் திரும்பினோம். மாலை சென்னை செனாய் நகர் வந்தடைந்தோம். ஒரளவு மனநிறைவோடு வந்த எங்களுக்கு இடி போன்ற செய்தி காத்துக் கிடந்தது. திருமதி குஞ்சிதம் மறைவு - அந்தோ திருமதி குஞ்சிதம் குருசாமி இயற்கை எய்தினார்கள் என்ற அந்தச் செய்தி எங்களை அதிர்ச்சியிலாழ்த்தியது. 30-7-1961 பகல் பன்னிரண்டரை மணிபோல் திருமதி குஞ்சிதம் சென்னைப் பொது மருத்துவ மனையில் மறைந்தார்கள் என்ற செய்தியை எப்படித் தாங்கிக் கொள்வது? 1959இல் தம்பி வள்ளுவன், "1960இல் தந்தை (சுப்பிரமணியம்), 1961க்கு அக்காளா?” என்று என் மனைவி காந்தம்மா புலம்பியதற்கு ஆறுதல் கூறத் தெரியாது மரமென நின்றேன். ஈருடலும் ஒருயிருமாக வாழ்ந்த்வர்கள், குஞ்சிதமும் குருசாமியும்! குஞ்சிதத்தை இழந்து துடிக்கும் அண்ணன் குருசாமிக்கோ குழந்தைகள் ரஷ்யா, கெளதமன் ஆகியோருக்கோ, 'இது இயற்கை' என்று சொல்ல வாய்வரவில்லை. எல்லோரோடும் சேர்ந்து கண்ணிர் வடிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யக்கூட இல்லை. திருமதி குஞ்சிதத்தின் பணி திருமதி குஞ்சிதம் பெற்றோருக்கு நல்ல மகள், பள்ளியின் சிறந்த மாணவி; குருசாமிக்கு உயிரனைய வாழ்க்கைத்துணை எங்குச் சென்றாலும் - அலுவலகம் தவிர - ஒன்றாகச் செல்வார்கள். அம்மையார் தனி மாந்தர் அல்லர்; தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் நாடிகளில் ஒன்றாக இயங்கியவர்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/512&oldid=788322" இலிருந்து மீள்விக்கப்பட்டது