உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 நினைவு அலைகள் வைதிகக் குடும்பத்தில் பிறந்த குஞ்சிதம், இருபது ஆண்டு காலம் வைதிக முறையில் வளர்க்கப்பட்டார். 1929 டிசம்பர் ஒன்பதில் ஈரோடு நகரில் திரு. குருசாமி அவர்களைத் திருமணம் செய்து கொண்டார். அதுமுதல் அவருடைய வாழ்க்கையில் புரட்சிகரமான சிந்தனை மாற்றம் ஏற்பட்டு விட்டது. முழுக்க முழுக்கக் குருசாமியின் மறு பதிப்பாகவே மாறிவிட்டார்! சிறு வேறுபாடு திரு. குருசாமி, கரை புரண்டோடும் காட்டு வெள்ளத்தின் துடிப்பைக் கொண்டவர். திருமதி குஞ்சிதமோ ஆழ்கடலின் அமைதியைப் பெற்றவர். அவர், தாம் பின்பற்றிய கொள்கைக்காகக் கொடுத்த விலை கொஞ்சமன்று பட்ட இன்னல்கள் பலவாகும். எல்லோருடைய நல்லெண்ணத்தையும் பெற்றிருந்த, நல்லாசிரியராக விளங்கிய திருமதி குஞ்சிதம் தமது கொள்கைக்காக வேலையையும் இழக்கச் செய்யப்பட்டார். உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக இருந்த அவர், பின்னர் சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி ஆசிரியையாகச் சேர நேரிட்டது. அத் தியாகத்தைப் பற்றி அம்மையாரோ, அவரது கணவரோ விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை. பகுத்தறிவு, சமத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளில் ஒன்றி வைரம்போல் உறுதியாக வாழ்ந்த அம்மையார். தமது பணியில் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்கள். விடுமுறை நாள்களில் இயக்கப் பணிக்காக ஊர் ஊராக அலைந்துவிட்டு வந்தாலும் பள்ளிக்கூட நாள்களில் காலம் தவறாது பள்ளிக்குச் சென்று விடுவார்! சுணங்காது பாடம் கற்பிப்பார்! கல்விப் பணியில் காட்டிய ஆர்வம், நேர்மை, பொறுமை, இனிமை ஆகிய நல்லியல்புகள் குஞ்சிதம் அம்மையாரைச் சென்னை மாநகராட்சியின் கல்வி அலுவலராக-முதற் பெண் கல்வி அலுவலராக-உயர்த்தின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/513&oldid=788323" இலிருந்து மீள்விக்கப்பட்டது