பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520 -- நினைவு அலைகள் பேரறிஞர் அண்ணா என்னை அழைக்கும்படி ஆலோசனை கூறினாராம். அதற்குமுன் பல்லாவரத்தில் நடந்த முதல் மாநாட்டி ற்கு அண்ணாவின் வழிகாட்டுதலின்படி என்னை அழைத்தார்கள். அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை குறிப்பிட்ட நாளில் எனக்கு அரசு அலுவல் ஒன்று இருந்தது. எனவே மறுத்துவிட்டேன். அதைப் பொருட்படுத்தாது இரண்டாவது முறையும் கூப்பிடும்படி அறிஞர் அண்ணா கூறினார். இம் முறை குறிப்பிட்ட நாளில் நிகழ்ச்சி ஒன்றையும் ஒப்புக் கொள்ளவில்லை. எனவே, மாநாட்டைத் தொடங்கி வைக்க இசைந்தேன். அம் மாநாட்டில் அப்போது நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக விளங்கிய அறிஞர் அண்ணா சிறப்புரை ஆற்றினார். அண்ணாவின் பாராட்டு மாநாட்டுத் தலைவர் நாரண துரைக்கண்ணன். நான் ஏற்கெனவே எழுதி வெளியாகியுள்ள பூவும் கனியும்’, ‘உதிரிப்பூ’, "வள்ளுவன் வரிசை ஆகிய நூல்களைக் குறிப்பிட்டு என்னைப் பாராட்டினார். அறிஞர் அண்ணா தமது சிறப்புரையில் எடுத்த எடுப்பிலேயே என்னைப்பற்றிக் கூறினார். - "திரு நெ.து. சுந்தரவடிவேலு நம்மோடு இருக்க வேண்டியவர்” என்ற தொடக்கச் சொற்றொடர் அவையின் கையொலியைப் பெற்றது. சில நொடிகள் பொறுத்து இருந்து விட்டு, “நீங்கள் அரசியலை நினைத்துக் கையொலி எழுப்புகிறீர்கள். நான் நினைத்தது அவர் எழுத்தாளர் உலகிற்கு வந்திருக்க வேண்டும் என்பது. “அவரைப் பல்லாண்டுகளாக நான் அறிவேன். அவர் சிறந்த முற்போக்குச் சிந்தனையாளர். "அவர் தாகம் நிரம்பியவர். முப்பத்தைந்து ரூபாய் ஊதியம் பெற்ற காலத்திலேயே மாதம் ஆறேழு ரூபாய்களைப் புதிய நூல்கள் வாங்கிப் படிப்பதற்குச் செலவிடுவார்” என்று என்னை ஊரறியப் பாராட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/559&oldid=788373" இலிருந்து மீள்விக்கப்பட்டது