பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544 நினைவு அலைகள் அறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முன்னணியில் நின்றது. மூதறிஞர் ராஜாஜியும் இந்தி தனி ஆட்சி மொழியாக இருப்பதை எதிர்த்தார். 1937 முதல் கட்டாய இந்தி எதிர்ப்பு உணர்விலே வளர்ந்துவிட்ட தமிழ் மாநிலம் கொந்தளிப்புக்கு ஆளானது. மாநிலத்தின் நாலா பக்கங்களிலும் பொதுக்கூட்டங்கள் வாயிலாகப் பொதுமக்களுக்கு இந்தி எதிர்ப்பு உணர்வு ஊட்டப்பட்டது. 1965 ஜனவரி 25 ஆம் தேதி, இந்தி தனி ஆட்சிமொழி ஆவதை எதிர்த்து மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம், கதவடைப்பு ஆகியவற்றை நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. அரசியல் நாடி பார்க்கத் தெரிந்தவர்கள் பெரும் போராட்டத்தை எதிர்பார்த்தார்கள். சென்னை சட்ட மன்றத்தில் உத்தேசப் போராட்டம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. “இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் காங்கிரஸ் கட்சியே சமாளித்துவிடும்; அரசு நடவடிக்கை எடுக்க நேரிடாது” என்கிற தோரணையில் அரசின் சார்பில் பதில் கூறப்பட்டது. இப் பதிலைக் கண்டு பலரும் கவலைப்பட்டனர். 'அரசு நினைக்கிற மாதிரி இந்தி எதிர்ப்புப் போராட்டம் இலேசாக இராது. கடுமையானதாக இருக்கும்’ என்று பொதுமக்கள் மட்டும் அல்லாது, காங்கிரஸ் பற்றில் பழுத்தவர்கள்கூட அஞ்சினர். சிலர் அதை முதலமைச்சரிடம் கூறினர். ஆர்.சுப்பராமன் வேண்டுகோள் அவர்களில் ஒருவர் மதுரை என். எம். ஆர். சுப்பராமன் அவர்கள் ஆவார். அவர் ஆழமான பற்றுடைய காங்கிரஸ் தியாகி. சுதந்திரப் போரட்ட வீரர். காந்தி அடிகளின் ஆக்கத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஆர்வம் உடையவர். இந்தி ஆதரவாளரும்கூட அவர் எந்தப் பதவியையும் நாடாது பொதுத் தொண்டாற்றி வந்த தியாகி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/583&oldid=788400" இலிருந்து மீள்விக்கப்பட்டது