உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி-1965 547 நான் வேறு அலுவல் பற்றிப் பேசினேன். சில நாள்கள் ஓடின. போராட்ட நாள் நெருங்கிற்று. சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தின் அருகே மாணவர் மறியல் நடக்குமென்று காற்றுவாக்கில் கேள்விப்பட்டேன். உடனே முதலமைச்சரைக் கண்டு அத் தகவலைச் சொன்னேன். இம்முறை முதலமைச்சர் மெளனம் சாதிக்கவில்லை. “இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி அவ்வப்போது கிடைக்கும் தகவல்களை உடனுக்குடன் என்னிடம் தெரிவித்து வாருங்கள்” என்று கட்டளையிட்டார். மதுரையில் கலவரம் போராட்ட நாள் வந்தது. செய்திகள் பறந்தன. பல நகரங்களிலும் கதவு அடைப்புகள், வேலை நிறுத்தங்கள், பேரணிகள் நடந்தன. மதுரை மாநகரில் கலவரம், துப்பாக்கிச் சூடு என்று பரபரப்பான செய்தி வெளியாயிற்று. 25-1-1965 அன்று பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இத்தகைய கிளர்ச்சிகளில் சாதாரணமாகச் சேராது, ஒதுங்கி நிற்கும் கல்வி நிலையங்களும் கிளர்ச்சிப் புயலில் சிக்கின. அடுத்த நாள் குடியரசு நாள். சென்னை நகரில் கடற்கரையில் குடியரசு விழா கொண்டாடப்பட்டது. அவ் விழாவிற்குச் சென்றிருந்தேன். விழா முடிந்ததும், என்னை முதலமைச்சர் கூப்பிட்டார். அவர் இல்லத்துக்கு வரும்படி ஆணையிட்டார். விழாவில் இருந்து அவர் இல்லம் போய்ச் சேர்ந்தேன். அப்போதைய தொழில் அமைச்சர் மாண்புமிகு ஆர். வெங்கட்ராமன் அவர்களும் அங்கு வந்து சேர்ந்தார். சில நொடிகளில் தலைமைச் செயலரும், கல்விச் செயலரும் அங்கு வந்து சேர்ந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/586&oldid=788403" இலிருந்து மீள்விக்கப்பட்டது