பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/660

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணா மாநிலப் பணிக்கு அழைத்தார் E41 அக் கருத்தரங்கிற்கு இந்திய அரசின் சார்பில் நான் அனுப்பப்பட்டேன். கருத்தரங்கு கூடினபோது, என்னை அதன் தலைவனாக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தார்கள். அது இந்தியாவுக்குக் கிடைத்த பெருமையாகும். அக் கருத்தரங்கு நடந்து கொண்டிருக்கையில், அதே அலுவலகத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் அலுவலர்கள் பற்றிய குழுவின் கூட்டம் ஒன்று நடந்தது. டாக்டர் ஏ. இராமசாமி முதலியார் அதன் தலைவர். அந்தப் பெரியவரை உணவு இடைவேளையின்போது, நான் காண நேரிட்டது. அவர் என்னை அடையாளம் கண்டு கொண்டார். நலம் பற்றிக் கேட்டார். என் தந்தை 1926இல் சட்டமன்றத் தேர்தலில் அவருக்குச் செய்த உதவியை நன்றியோடு நினைவு கூர்ந்தார். பேச்சு வாக்கில், “நீங்கள் எப்போது சென்னை அலுவலுக்கு வரப்போகிறீர்கள்?’ என்று கேட்டார். எனக்கு அலுவல் முறையில் தகவல் ஏதுமில்லை என்று பதிலுரைத்தேன். “விரைவில் எதிர்பார்க்கலாம்” என்று அவர் கூறினார். அப்போது யுனெஸ்கோவின் துணைப் பொது இயக்குநராக டாக்டர் மால்கம் ஆதிசேஷய்யா விளங்கினார். அவர் ஒர் இரவு, டாக்டர் ஏ. இராமசாமி முதலியாரையும் என்னையும் தம் இல்லத்திற்கு அழைத்து நல்ல விருந்து அளித்தார். மசால்தோசை உட்படப் பல தமிழ்நாட்டு உணவு வகைகளைச் சமைத்துப் பரிமாறிய திருமதி. ஆதிசேஷய்யாவின் விருந்தோம்பும் பண்பை எண்ணுந்தோறும் இனிக்கிறது. தமிழக அரசின் ஒப்புதல் முதலமைச்சர் அண்ணா கட்டளையிட்டபடி, மறுநாளே "உழவர் எழுத்தறிவுத் திட்டத்தை’ச் சென்னை மாநில அரசு ஏற்றுக் கொள்வதாக இந்தியக் கல்வி அமைச்சகத்துக்குத் தந்தி வந்தது. இரண்டு நாள்களில் அது கடிதம் வாயிலாக உறுதி செய்யப்பட்டது. முதலமைச்சர் மீண்டும் புதுதில்லிக்கு வந்தார். மேற்படி திட்டம் பற்றி அவரோடு பேசி அவருடைய அறிவுரையைப் பெற வாய்ப்புக் கிட்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/660&oldid=788485" இலிருந்து மீள்விக்கப்பட்டது