பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/661

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

642 நினைவு அலைகள் வழக்கப்படி, அ, ஆ, இ, ஈ என்று எழுத்துகளைக் கற்றுக் கொடுத்துவிட்டு, பின்னர் சொற்களைச் சொல்லிக் கொடுப்பதா என்ற கேள்வி எழுந்தது. சில ஆப்பிரிக்க நாடுகளில் வேறு முறையில் எழுத்தறிவு இயக்கம் நடப்பதைச் சுட்டிக் காட்டினேன். அம்முறை என்ன? எழுத்துகளைச் சொல்லிக் கொடுக்கத் துவங்குவதற்குமுன், வயது வந்தோர் வழங்கும் சிறுசிறு சொற்களையே, கற்றுக் கொடுப்பது. அப்படிச் சில பாடங்களைக் கற்றபின், அவற்றில் வரும் எழுத்துகளைப் பிரித்து வரிசைப்படுத்தி, எழுதிக்காட்டிக் கற்றலை உறுதிப்படுத்துவது. இம் முறையை வெற்றிகரமாக வெள்ளோட்டம் பார்த்ததாக அறிந்தேன். அதை முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். அவர் அம் முறையைப் பின்பற்றலாம் என்றார். எழுத்தறிவு பெற வரும் உழவர்கள் பச்சைக் குழந்தைகள் அல்லர். அவர்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் அவற்றின் வழக்கில் உள்ள பொருள்கள் புரியும். எனவே ஒவ்வொரு சொல்லாகக் கற்றுக் கொடுக்க முயல்வது விபரீதமானதல்ல. அம் முறையைப் பின்பற்ற முடிவு செய்யப் பட்டது. முதலமைச்சரிடம் வாக்கு கொடுத்தபடி நான் மாநில அலுவலுக்குத் திரும்பிப்போக விரும்புவதாக இந்திய அரசுக்கு முன்அறிவிப்பு கொடுத்துவிட்டேன். இந்தியக் கல்வி அமைச்சகத்தில் என்னோடு அலுவல் பார்த்தவர்களுக்கு அது ஏமாற்றத்தைக் கொடுத்தது. அமைச்சுப்பணி முடிந்து அங்கிருந்து சென்னைக்கு மாறும் போது என்னுடைய சகாக்கள் வழியனுப்பு விருந்தளித்துப் பாராட்டினார்கள். நானும் அவர்களுக்குத் தேநீர் விருந்து அளித்துத் தோழமையை வெளிப்படுத்திக் கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/661&oldid=788486" இலிருந்து மீள்விக்கப்பட்டது