பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/688

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகத்தில் பொது நூலக இயக்கம் 669 கிளை நூலகங்களில் தனியாகப் பெண் அலுவலர்களைப் போட்டு நூல்களை அவர்களது வழியாக வீட்டிலுள்ள மாதர்களுக்கு அனுப்புவதற்குப் போதிய நிதி வசதி இல்லை என்பது எனக்குத் தெரியும். எனவே, என் சிந்தனை வேறு பக்கம் சென்றது. அந்தச் சிந்தனையை விழாக் கூட்டத்தில் வாய்விட்டுக் கூறினேன். 'இனம் இனத்தோடு என்பார்கள். இனம் தன் இனத்துக்கு உதவி செய்ய வேண்டாமா? பெண்ணினம் தன்னின வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உதவ முன் வரவேண்டும். "ஆசிரியர்கள் பெற்ற கல்வி இன்பத்தை அலுவல் பார்க்காத படித்த பெண்கள் பெற வேண்டாமா? “ஒவ்வோர் ஆசிரியையும் குறைந்தது நான்கைந்து படித்த பெண்களுக்குக் கிளை நூலகத்திலிருந்து நூல்களை வாங்கிக் கொண்டு போய் வழங்குவது தாங்கமுடியாத சுமையா? "இதற்காகத் தெருத் தெருவாக அலைய வேண்டாம். அக்கம் பக்கங்களில் உள்ள சிலருக்கு இவ் வுதவி செய்தால் போதும். "தங்கள் பள்ளிப் பொறுப்புகளுக்கும் குடும்பப் பொறுப்பு களுக்கும் இடையூறு இல்லாத வகையில் இப்பணியைச் செய்யக்கூடியவர்கள் முன்வாருங்கள். “இக் கூடுதல் தொண்டு தன் இனத்தை உயர்த்தும் தொண்டு மட்டுமல்ல. சிறந்த சமூகப் பணி, நல்ல நாட்டுப் பணி ஆகும். "இப் பணியை ஒருமுறை ஏற்றுக் கொண்டால் பணிக் காலம் முழுதும் அதைச் செய்தாக வேண்டும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. முடிந்தவர்கள் முடியும் காலம்வரை செய்தால் போதும்.” இப்படி வேண்டுகோள் விடுத்தேன். அவ் விழாவிலேயே இருபத்தைந்து ஆசிரியைகள் நூலறிவு பரப்பும் தொண்டினை மேற்கொள்ள முன்வந்தனர். m ஆசிரியர்கள் வழியாக அனுப்பும் நூல்களுக்குக் காப்புப் பணத்திலிருந்து விதி விலக்கு அளிக்க ஆணைக் குழுத்தலைவர் திரு. புருஷோத்தம முதலியார் முன் வந்தார். - அன்றே இருபத்தைந்து ஆசிரியர்கள் நூலகத்தொண்டர் களாகப் பதிந்து கொண்டார்கள். சில ஆண்டு காலம் தொடர்ந்து இச் சமூகத் தொண்டினை ஆற்றி வந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/688&oldid=788515" இலிருந்து மீள்விக்கப்பட்டது