உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/703

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

684 நினைவு அலைகள் 'ஐயா, நாங்கள் வேலைநிறுத்தம் செய்து வரும் பொறியியல் கல்லூரி மாணவர்கள். தங்கள் முதல் வருகையின்போதே இப்படித் திரண்டு வந்து, எங்கள் குறையையும் கோரிக்கையையும் தெரிவிப்பதற்காக எங்களை மன்னியுங்கள். பயணிகள் அறைக்குச் செல்வோம். இரண்டு மூன்று மணித்துளிகள் காது கொடுங்கள் போதும்” என்று வேண்டினார்கள். உடன்பட்டேன். உள்மதிப்பீட்டு முறையிலுள்ள கேடு பயணிகள் அறையில் அமர்ந்ததும், அவர்கள் சொன்ன குறை என்ன? உள் மதிப்பீட்டு முறை பேராசிரியர்கள் தங்களுக்கு ஆகாத மாணவர்களைப் பழி வாங்கத்தான் பயன்படுகிறது என்பது குறை. அவர்கள் விடுத்த கோரிக்கை என்ன? உள் மதிப்பீட்டு முறையை ஒழித்துவிடுங்கள். இக் கோரிக்கையை முன்வைத்து சென்ற பத்துநாள்களாக பொறியியல் கல்லூரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன என்ற தகவலைத் தந்தார்கள். உள் மதிப்பீட்டு முறை, எந்த ஒருவரோ தனிப்பட்ட முனைப்பு காரணமாகக் கொண்டு வந்ததல்ல; பாடத்திட்டக் குழு பரிந்துரைக்க, ஆட்சிக் குழு ஏற்க, கல்விக் குழு முத்திரையிட பல்கலைக் கழகப் பேரவை இறுதி ஒப்புதல் கொடுக்க, அது, நடைமுறைக்கு வந்தது. எனவே புதிய துணைவேந்தர் தானாக முடிவு செய்ய உரிமையில்லை என்று புலப்பட்டது. அப்போது பொறியியல் பாடத்திட்டக் குழுவின் தலைவர் திருவாளர். ஜி. ஆர். தாமோதரன் ஆவார். எனவே “அவரிடம் சொன்னிர்களா?” என்று மாணவர்களின் தலைவர்களைக் கேட்டேன். "சொன்னோம், பலர் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டி யிருப்பதால் தானாக ஒன்றும் செய்வதற்கில்லை என்று பதில் உரைத்தார்” என்றார்கள். மாணவர்களின் தலைவர்களோடு நொடியில் உடன்படிக் கைக்கு வந்தேன். அது என்ன? “நான் ஒரு வினாடியும், தாமதியாது பொள்ளாச்சி நிகழ்ச்சிக்குச் செல்கிறேன். சென்னைக்குத் திரும்பப் பகல் விமானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு வரும்போது பத்து மணித்துளிகள் முன்னதாக வந்து திரு. ஜி. ஆர். டியோடு நேரிலோ, தொலைபேசியிலோ தொடர்பு கொள்கிறேன். அவருடன் பேசிய பிறகு, மற்ற உறுப்பினர்களோடு பேசி எப்படி உதவி செய்யலாம்” என்று முடிவெடுக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/703&oldid=788532" இலிருந்து மீள்விக்கப்பட்டது