உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/709

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

690 நினைவு அலைகள் துணைவேந்தர் தனி ஆட்சி நடத்துபவர் அல்லர். பலரும் கூடி முடிவெடுத்து நிர்வகிக்க வேண்டியிருப்பதால், உரியவர்களின் கவனத்திற்கு இதைக் கொண்டு போவேன்” என்று நான் சொல்லிக் கொண்டு வருகையிலேயே ஒரு ஆசிரியர் ஆத்திரமூட்டும் குரலில், “இந்தப் பதில் எல்லாம் எங்களுக்குத் திருப்தி அளிக்காது. எங்களுக்கு உரியதைத்தான் நாங்கள் கேட்கிறோம். பல்லாண்டு பொறுத்துப் பார்த்து விட்டுத்தான் முறையிடுகிறோம். இனியும் காலதாமதமானால் எங்கள் சகாக்கள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. உடனடி ஒரு முடிவு காணுங்கள்” என்று மிரட்டும் பாணியில் கூறினார். அமைதி காத்தேன் நான் சினம் கொள்ளவில்லை. “நூறு திங்கள் பொறுத்தவர்கள் எனக்கு நூறு நாள்கள் கூட தவணை கொடுக்காமல் ஆத்திரப் படுவது சரியா? உங்களில் எவருக்கும் நான் பகைவன் அல்லவே. உங்களிடம் பரிவு கொண்டவனை ஏன் ஆத்திரம் ஊட்டப் பார்க்கிறீர்கள்” என்று மென்மையாகவே பதில் கூறினேன். வந்தவர்கள் அமைதியோடு கலைந்தனர். பல்கலைக் கழகத்தின் அடுத்த ஆட்சிக் குழுக் கூட்டம் வருவதற்குமுன் பணியாளர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை ஆய்வுசெய்தேன். ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு கூடுதல் செலவு ஆகுமென்று கணக்குப் போட்டு வைத்திருந்தேன். ஆயத்தமா யிருக்கிறோம் என்ற நிறைவோடு குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரத்தில் ஆட்சிக்குழுக் கூட்டத்தைத் தொடங்கினேன். பல உறுப்பினர்கள் எடுத்த எடுப்பிலேயே நிகழ்ச்சி நிரலுக்கு முன், ஒரு நெருக்கடியைப் பற்றிப் பேச வேண்டும் என்றார்கள். குழுவின் தலைவர் என்கிற முனைப்பு, மறுக்க வேண்டும் என்று உந்திற்று. மறுநொடி, சமாளித்துக் கொண்டேன். பொறுமை கடலினும் பெரிது என்பது நினைவிற்கு வந்தது. என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டேன். “நிகழ்ச்சிநிரல் எங்கோ ஒடிவிடாது. உங்கள் உள்ளங்களில் முள்ளாக உறுத்தும் விவகாரத்தைப் பற்றி முதலில் பேசுவோம். தயவுசெய்து ஒவ்வொருவரும் கருத்தைச் சொல்லி எனக்கு வழிகாட்டுங்கள்” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/709&oldid=788538" இலிருந்து மீள்விக்கப்பட்டது