உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/715

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

696 நினைவு அலைகள் புதுவழி காட்டினேன் "நான் ஒரு வழி சொல்லட்டுமா? ஒவ்வொரு கல்லூரியிலும், ஒவ்வொரு துறையிலும் ஆசிரியர்களாகப் பணிபுரிகிறவர்களைக் கூட்டி, அவர்களுடைய ஆலோசனைகளை, வாங்கி அனுப்பும்படி கல்லூரி முதல்வர்களுக்கு எழுதுவோம். அவற்றைத் திரட்டித் தொகுப்போம். பிறகு கல்லூரி முதல்வர்களின் கூட்டத்தைக் கூட்டி, அதன் முன் எல்லா ஆலோசனைகளையும் வைப்போம். அக் கூட்டம் எந்தெந்தப் பாடத்தை, எப்படியெப்படி மாற்ற வேண்டும் என்று சொல்கிறது என்பதைப் பார்ப்போம். அவற்றின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம். இப்போதைக்கு இதுபற்றித் திறந்த மனத்தோடு இருப்பதாக அறிவித்து, தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு வற்புறுத்தாதபடி, கல்விக் குழுவை கேட்டுக் கொள்வோம்” என்று வழி காட்டினேன். நான் எடுத்த நிலையை ஆட்சிக் குழு உண்மையாக ஆதரித்தது. அதைக் கல்விக் குழுக் கூட்டத்தில் அறிவித்தபோது பார்த்தசாரதி அய்யங்காரைப் போலவே, எல்லாருமே பூரிப்படைந்தனர். அன்று முதல் பல்கலைக் கழகத்தின் சூழல் குளிர்ந்துவிட்டது எனலாம். வெளியில் சில நிறுவனங்கள் வெவ்வேறு குழுக்களாக பிரிந்து நின்று சிலர் தீர்மானங்கள் கொடுத்தால் ஆதரிப்பது, சிலர் கொடுத்தால் தள்ளி விடுவது என்கிற பலப்பரீட்சைப் போக்கில் பல்கலைக் கழகம் இயங்காதபடி பார்த்துக்கொள்ள முடிந்தது. பாடத் திட்டத்தின் தரத்தை உயர்த்துங்கள்! வாக்கு கொடுத்தபடி சூட்டோடு சூடாக எல்லாக் கலை கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதை ஒட்டி எல்லா முதல்வர்களும் பற்பல துறைகளுக்கும் போதிய அவகாசம் கொடுத்து, பாடத் திட்டங்கள் பற்றி விரிவான கருத்துகளையும் அறிவுரைகளையும் வாங்கி அனுப்பினார்கள். அவற்றையெல்லாம் தொகுத்து ஆய்வு செய்யப்பட்ட பிறகு, முதல்வர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. இதற்கு இடையில் நான் பல மாவட்டங்களுக்கும் சென்றேன். முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டினேன். பாடத் திட்டங்கள் பற்றிப் பல்கலைக் கழகம் திறந்த மனத்தோடு இருப்பதையும், ஆசிரியர் சமுதாயம் விரும்புகிறபடி மாற்றிக் கொள்ளலாம் என்றும் விளக்கினேன். நேற்று சேர்ந்த ஆசிரியர் முதல், முப்பதாண்டு பட்டறிவுடைய முதல்வர்வரை பலரும் கலந்து, பேசி அறிவுரைகளை வழங்க முடிந்தது. முடிவு என்ன? பாடத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/715&oldid=788546" இலிருந்து மீள்விக்கப்பட்டது