பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/746

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. பாலசுப்பிரமணிய அய்யர் ஆட்சிக் குழு உறுப்பினரானார் 727 அவர், “ஆளுநர் நியமனத்தில் இடம்பெற அரசின் தயவு வேண்டும். என் நிலையில் நான் இன்றைய அரசை அணுகிக் கேட்பது எனக்குச் சரியாகப்படவில்லை. இவ்வளவு காலம் ஆட்சிக் குழுவில் இருந்து கல்விப்பணி ஆற்றியது போதும்” என்று அவர் தமக்குள்ள சங்கடத்தைத் தெரிவித்தார். "நீங்களாகக் கேட்க வேண்டாம். பல்கலைக் கழகத்தின் நன்மையைப் பேணிக்காப்பது துணைவேந்தர் கடமை அல்லவா? அக் கடமை பற்றி, தங்களை ஆட்சிக்குழுவிற்கு நியமிக்கும்படி, தமிழக முதலமைச் சரை நான் வேண்டிக் கொள்ள இடம் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டேன். “தங்கள் நல்லெண்ணத்தை மதிக்கிறேன். தங்களைப் போன்றோர்களின் அன்பான அழைப்பைப் புறக்கணிக்க மனம் இல்லை. அதே நேரத்தில் எனக்காக வாதாட வேண்டிய நிலைக்குத் தங்களைத் தள்ளுவது சரியாகப்படவில்லை. என்னை நியமிக்க வேண்டும் என்னும் ஆலோசனை பெரிய இடத்தில் சலசலப்பை ஏற்படுத்தாது என்று நீங்கள் நம்பினால் கேட்டுப் பாருங்கள். தயக்கம் காட்டினால் சட்டென்று விட்டுவிடுங்கள்” என்று அண்ணன் தம்பிக்குச் சொல்வதுபோல் ஆலோசனை கூறினார். கலைஞரை வேண்டினேன் திரு. பாலசுப்பிரமணிய அய்யரின் இசைவைப் பெற்ற பிறகு இரண்டொரு நாள்களில் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதியைக் கண்டேன். “பல்கலைக் கழக ஆட்சிக் குழுவில் என்னிலும் நீண்டகாலத் தொடர்பு உடையவர்கள் இருவர் உள்ளனர். அவர்களில் ஒருவர் திரு. ஜி. ஆர். தாமோதரன். மற்றொருவர் திரு. பாலசுப்பிரமணிய அய்யர். முந்தையவர் ஆட்சிக் குழுத் தேர்தலுக்கு நிற்கப் போகிறார். அவர் வெற்றி பெறுவது உறுதி. எனவே அவருடைய ஒத்துழைப்பு எனக்குக் கிடைக்கும். திரு. தாமோதரனைக் காட்டிலும் வயதான திரு. பாலசுப்பிரமணிய அய்யர் தேர்தலுக்கு நிற்கப் போவதில்லை. அவர் ஆட்சிக் குழுவில் இருந்தால் பழுத்த பட்டறிவு நமக்குக் கிடைக்கும். எனவே ஆளுநர் நியமிக்க வேண்டிய மூவரில் ஒருவராக திரு. அய்யரை நியமிக்கலாம். அது தங்களுக்கு உடன்பாடானால் நன்றாயிருக்கும், தயவுசெய்து அத்தகைய வாய்ப்பினை ஏற்படுத்துவது பற்றிச் சிந்திக்கக் கோருகிறேன்” என்று கூறினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/746&oldid=788580" இலிருந்து மீள்விக்கப்பட்டது