உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/773

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

754 நினைவு அலைகள் 'இந்து நாளிதழின் செய்தியாளர்.என்னைப் பேட்டி கண்டு இரங்கல் செய்தியை வாங்கிக் கொண்டார். அது இந்து'வில் - வெளியாயிற்று. பெரியாரின் உடல் வேலூரை விட்டுச் சென்னைக்குப் புறப்படும் முன் நானும் காந்தம்மாவும் சென்னைக்குப் புறப் பட்டோம். வழிநெடுகிலும் ஊர்தோறும் காலை நேரங்களில் பொதுமக்கள் கண்ணிரும் கம்பலையுமாகக் காத்துக் கொண்டி ருந்தார்கள். பெரியாரின் உடல் ராஜாஜி மண்டபத்தை வந்து அடைந்தபோது, அங்கிருந்து கண்ணிர் பொழிந்தோம். வேதனையால் நெஞ்சு வெடித்துவிடும்போலிருந்தது. “மெய்யா? மெய்யா? ஐயா மறைந்தது மெய்யா?” என்று தொடங்கி ஒரு பக்கத்திற்கு உரைநடைக் கவிதை எழுதித் துக்கத்தைக் குறைக்க முயன்றேன். இந்த இரங்கல் கவிதை பல தமிழ் நாளிதழ்களில் வெளியானது. 6. 1. 1974 அன்று திருச்சியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் சிலரோடு நானும் இரங்க்ல் உரையாற்றும் வேதனையைப் பெற்றேன். சிந்தனையைக் காட்டிலும் வேதனை என்னைப் பேச வைத்தது. சத்திய சீலர் திருச்சி இரங்கல் கூட்டத்தில், பிஷப் ஈபர் கல்லூரி முதல்வர் டாக்டர் சற்குருதாஸ் உரையாற்றுகையில் வெளிப்படுத்திய தகவல் ஒன்று நெஞ்சை நெகிழ்வித்தது. பெரியாரின் சிறப்புகளில் எல்லாம் உயர்ந்ததாக ஒளிவிட்டது. அது என்ன? சற்குருதாசும், அவரது மனைவியும் தங்கள் மகளை அழைத்துக்கொண்டு போய் பெரியாரை ஒரு முறை கண்டார்கள். அப் பெண்ணுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தரும்படி வேண்டினர். அப் பெண் பெற்றிருந்த மதிப்பெண்களைப் பார்த்த பெரியார், -- “உங்கள் மகள் பெற்றிருக்கிற மார்க்குக்கு எவருடைய பரிந்துரையும் இல்லாமலேயே இடம் கிடைக்கும், நீங்கள் பரிந்துரை தேடி அலைய வேண்டாம்” என்று பதில் உரைத்தார். அதற்குச் சற்குருதாஸ், "மற்றவர்கள் இடித்துத் தள்ளிவிட்டு இடம் பிடித்துக் கொள்ளாமல் பாதுகாக்கத் தங்கள் பரிந்துரை பயன்படும்” என்று உரைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/773&oldid=788610" இலிருந்து மீள்விக்கப்பட்டது