பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/775

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

756 நினைவு அலைகள் அவருடைய தனி வாழ்க்கையில் துணையாயிருந்தது போலப் பொது வாழ்க்கையிலும் பணியிலும் பங்கு கொண்டு அவருடைய இயக்கப் பணிகளில் அவருக்குத் துணை நின்றார். பல கிளர்ச்சிகளில், பல போராட்டங்களில் கலந்து கொண்டார். இயக்கத் தோழர்களை மதித்து ஊக்கப்படுத்தியவர் ஆவார். பெரியாருக்குப்பின் திராவிடர் கழகப் பொறுப்பேற்று அதன் பணிகளில் ஆதாயமில்லாமல், செம்மையாக நடத்தி வந்தார். இந்திய அரசு நெருக்கடி நிலைமை அறிவித்துத் திராவிடர் கழகத்தின் முன்னணியினரைத் தொல்லைபடுத்தியபோது, கலங்காது நின்று அதற்கு ஈடு கொடுத்துச் சமாளித்தார். தமது சொத்து முழுவதையும் இயக்கத்துக்கு எழுதி வைத்துவிட்டார். அதைக் கொண்டு திருச்சியில் கல்வி நிறுவனங்கள் பல நடக்கின்றன. அம்மையார் தன்னல மறுப்புக்கு இயக்கம் தவிர வேறு பற்று இன்மைக்கு, ஒர் பேரியக்கத்தை - மக்களியக்கத்தை - நடத்தும் ஆற்றலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார். முயற்சி மணியம்மையார் அடக்கமான பிறகு சில மணித்துளிகள் அங்கேயே இருந்தோம். எனக்குப் பல்லாண்டுகளாக அறிமுகமான சுயமரியாதை இயக்க நண்பர்களில் ஒருவர், என்னைத் தனியாக அணுகினார். - 'அம்மாவுக்குப் பிறகு திராவிடர் கழக இயக்கத்தைத் திரு. வீரமணியிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இது எங்களுக்கு உடன்பாடல்ல! எனவே, சுயமரியாதை பிரசார நிறுவனத்திடம் நிறைய சொத்து இருக்கிறது. அதைப் பராமரித்து இயக்கத்தை நடத்த உயர்நீதிமன்றம் ஒரு திட்டத்தைத் திட்ட வேண்டுமென்று உயர்நீதிமன்றத்துக்கு விண்ணப்பம் போட நினைத்துள்ளோம். திட்டம் போடும்வரை இடைக்கால ஏற்பாடாக மூன்று, நான்கு அறங்காவலர்களை நியமிக்கும்படி கோருவதாக உள்ளோம். அதற்காக நீதிமன்றத்துக்குச் சில பெயர்களைச் சொல்வதாக எண்ணி உள்ளோம். அப் பெயர்களில் ஒன்றாகத் தங்கள் பெயரைச் சொல்ல இசைவு கொடுங்கள்.” - இப்படிக் கோரினார் என் நண்பர். எனக்குள் எழுந்த வெகுளியை அடக்கிக் கொண்டு, “நீங்கள் செய்வது இயக்கத்திற்குத் தீங்கானது. தயவுசெய்து என் பெயரை எந்தத் திட்டத்திற்கும் இழுக்காதீர்கள்” என்று உறுதியாகக் கூறிவிட்டேன். அதோடு என்னை விட்டுவிட்டார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/775&oldid=788612" இலிருந்து மீள்விக்கப்பட்டது