உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/817

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

798 நினைவு அலைகள் கண்டு எனக்குப் பரிந்துரைக்கும்படி கேட்டுக் கொள்வதே பொருத்தம் என்று எனக்குத் தோன்றிற்று. ஆகவே அவரைக் காணவேண்டுமென்று விரும்புவதாக வற்புறுத்தினேன். மாலைப் பொழுது அலுவலகத்தில் இருந்து என் வீடு திரும்புகையில் அவரைக் காண்பதென்று ஏற்பாடாயிற்று. முன்னேற்பாட்டின்படி, கோவிந்தராஜுலுவைக் கண்டேன். அவர் வாக்குறுதி தந்தார். அண்ணனுக்கு நிறைய பொறுப்புகள் எனவே, அவர் துணைவேந்தர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்று என்னிடம் கூறினார். வழக்கமான பாசத்தோடு, தேநீர் விருந்தளித்து என்னை அனுப்பி வைத்தார். சேலம் கஸ்தூரிப் பிள்ளை இல்லத்தில் சில நாள்கள் சென்றன. சேலத்தில் இரத்தினசாமி பிள்ளை மகனுக்குத் திருமணம். அது சீர்திருத்த முறையில் நடத்தப்பட்டது. அதில் நானும் கலந்து கொண்டேன். திருமணத்திற்குப் பிறகு அமைச்சர் க. இராசராமின் தந்தையார் ஆகிய திரு. கஸ்துாரிப் பிள்ளை என்னைத் தம் இல்லத்துக்கு அழைத்துக்கொண்டு போனார். வீட்டுச் சாப்பாடே எனக்கு ஒத்துவரும் என்று சொல்லி, தம் வீட்டில் பகல் உணவு அளித்தார். நாங்கள் இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் திரு. இராசாராம் அங்கு வந்து சேர்ந்தார். அமைச்சர் என்னைப் பார்த்து, “என்ன, நீங்கள் துணைவேந்தர் பதவியிலிருந்து ஒய்வுபெற விரும்புகிறீர்களாமே? அது மெய்தானா?” என்று கேட்டார். நான் பதில் சொல்வதற்கு முன் திரு. கஸ்துாரிப் பிள்ளை தலையிட்டார். “நெ. து. சு.வின் மதிப்பு பெரியாருக்குத் தெரியும். எனக்குத் தெரியும். என் தலைமுறைக்குத் தெரியும். இப்படியொருவர் நமக்குக் கிடைக்கனுமே! அவர் போகிறேன் என்றாலும் நீங்களே கட்டாயப்படுத்தி அவரைப் அப் பதவியில் வைத்திருக்க வேண்டும்” என்று அவர் கூறினார். "யாரோ எனக்குப் பகையாக அத்தகைய குறும்புவதந்தியைப் பரப்பி வருகிறார்கள். இடம் காலியாக இன்னும் எட்டு மாதங்கள் இருக்கின்றன. இப்போதே பெரியவர்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டுமா என்று வாளாவிருந்தேன். இப்படி வதந்தி பரப்பப் படுவதால், உடனே முதலமைச்சரையும் கல்வி அமைச்சரையும் கண்டு வேண்டிக் கொள்கிறேன். வழக்கம்போல் நீங்களும் உதவி செய்யுங்கள்” என்று பதிலுரைத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/817&oldid=788658" இலிருந்து மீள்விக்கப்பட்டது