பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

அதிலிருந்து ஹாவாய்த் தீவுகளில் கிறித்துவம் பரவத் தொடங்கிற்று.

1843 ஆம் ஆண்டிற்குப்பின் அமெரிக்க, பிரெஞ்சு, பிரிட்டன் அரசுகள் ஹாவாயை ஒரு தனி நாடாக ஏற்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட இரு அரசர்களின் ஆட்சிக்குப்பின், 1891 இல் முதல் அரசி லிலியோ காலனி பட்டத்திற்கு வந்தார். 1893 இல் ஏற்பட்ட புரட்சியினால் அரசி பட்டம் துறக்க வேண்டியதாயிற்று. 1894 ஆம் ஆண்டு ஜூலை 4 இல் ஹாவாய் குடியரசாகியது. சேன்போர்டு பி. டோல் அதன் முதல் தலைவர்.

1900 இல் ஹாவாய் ஆட்சி நாடாக (territory) மாறிற்று. தலைவர் மக்கின்லி, டோலை முதல் கவர்னராக - ஆளுநராக - அமர்த்தினார்.

ஹாவாய் வரலாற்றில் வருந்தத்தக்க நிகழ்ச்சி ஜப்பான் தாக்குதல் ஆகும். 1941 டிசம்பர் 7 இல் ஜப்பான் விமானங்கள், பேள் ஹார்பரிலுள்ள அமெரிக்கக் கடல் தளத்தைத் தாக்கின. இதனால் பசிபிக்போர் தொடங்கியது; இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா கலக்க வேண்டியதாயிற்று.

1903 இல் முதல் தடவையாக நாடாவதற்கு அமெரிக்கக் காங்கிரசிற்கு ஹாவாய் மனுப் போட்டது. 56 ஆண்டுகளுக்குப்பின் இருபத்துநான்காவது தடவையாக வேண்டியபொழுது, அதன் வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஹாவாய் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றாயிற்று.