உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்



தன. நகரின் தோரண வாயில்கள், தேரணி வீதிகள், பூரண மாளிகைகள் பற்றி எல்லாம் திருவிளையாடற் புராணம் வர்ணிக்கிறது.37

காவிரிப்பூம்பட்டினம் மூன்று பிரிவுகளாக (மருவூர்ப் பாக்கம், பட்டினப்பாக்கம், நாளங்காடி) இருந்தது போல மதுரை மாநகரம் அன்று நான்கு பெரும் பிரிவுகளாக இருந்தது என அறியமுடிகிறது. அவையாவன:

1. திருவாலவாய்
2. திருநள்ளாறு
3. திருமுடங்கை
4. திருநடுவூர்38

இவற்றோடு ஐந்தாவதாக இருந்தையூர் (இப்போது கூடலழகர் கோயிலுள்ள பகுதி) ஒரு பகுதியையும் சேர்த்துக் கூறுவர் ஆய்வாளர் மு. இராகவய்யங்கார்.39

நீடுநீர் வையை நெடுமால் அடியேத்த40

என இளங்கோவடிகளும் இதனைக் கூறியுள்ளார். இங்கு வையையாவது நகரின் மேற்றிசையில் தென்பாற் பிரிந்து மாலை போலோடிய வையையின் மற்றொரு பிரிவாகிய கிருத மாலை.

மதுரை நகர் எந்நாளும் மணக்கோலங் கொண்டது போன்ற புதுமை மலர்ச்சியோடுள்ள நகர் என்னும் பொருள்பட 'மணமதுரை’ என்றார் இளங்கோ.41 இதற்கு உரை எழுதிய அரும்பதவுரைகாரர் 'கலியாண மதுரை’ ‘ என்றே பதசாரம் எழுதினார்.

பத்துப்பாட்டுள் முதலாவதாகிய திருமுருகாற்றுப் படையில்-திருப்பரங்குன்றம் பற்றிக் கூறுகையில் அது மதுரைக்கு மேற்கேயுள்ளதாகக்42 கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்றோ மதுரையின் தென்பகுதியான அவனியாபுரத்தின் மேற்கேதான் பரங்குன்று உள்ளது.