பக்கம்:பாற்கடல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

51


என்ன? நான்தான். ஒரு சோற்றைப் பதம் பார்க்கும் திறன்தான் எனக்கு எழுத்து. நான் காணும் அகண்ட தரிசனத்துக்கு, எழுத்துதான் எனக்குப் பலகணி.

பலகணிப் பார்வைதான் - முழுப் பார்வையல்ல. ஆனால் இதுவே எவ்வளவு பெரும் பேறு!

வாசகன் எழுத்தாளனை, அவன் எழுத்தைப் படித்து அதன்மூலம் அவனை இனம் கண்டுகொள்ளவும் முடிந்ததென்றால் - அது என்ன சாதாரண வாய்ப்பா?

‘கடினமான உழைப்பு’ சொல்லில் வாய்மை (The true word) கொஞ்சம் அதிர்ஷ்டம் - இவைகளின் கூட்டுதான் வாசகனுக்கு எழுத்தாளனைத் தெரியப்படுத்தும் எழுத்து என்கிறான் ஹெமிங்வே.

என் எழுத்தின் மூலம் எனக்குக் கிடைத்திருக்கும் என் சோதர சோதரிகளே, என் குழந்தைகளே, நான் அறியாமலே என்னை நினைப்பவர்களே, என்மேல் நல்ல எண்ணம் கொண்டு, நான் அறியாமலே என்னை வளர்ப்பவர்களே, உங்கள் அனைவரையும் தழுவிக் கொள்ளக் கைகள் எனக்கில்லையே? என் தாய்மார்களே, தாதையர்களே, உங்கள் பாதங்களில் பொருத்தவே - சிரங்கள் எனக்கில்லையே! நான் அர்ச்சுனனாகவேயிருக்கலாம். ஆனால் இந்தச் சமயத்துக்குச் செயலற்ற பிருகந்நளையாக நிற்கிறேனே! எனக்கு நமஸ்கரிக்கப் பிடிக்கும். தன் முழுமையின்மையில் தவிக்கும் உயிர் ஏக்கத்தின் விசுவரூபத்தை யாரேனும் ஒருத்தர், ஒரு சமயத்துக்கு யாரென்றாலும் நீதான், அவள் என்றாலும் நீதான், அவன் என்றாலும் நீதான், உணர முடிந்தால், நீதான் என் பெருந்திரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/57&oldid=1533288" இலிருந்து மீள்விக்கப்பட்டது