உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

புதியதோர் உலகு செய்வோம்

பெற்றுத்தரும் கருவியாகவும் மட்டுமே நெறிப்படுத்தப்பட்டு வந்திருக்கிறாள். இவளுடைய அறிவுக்கண்ணும் சிந்தனைத் திறனும் இந்த உடல் கருத்தியலால் குருடாக்கப்பட்டு, பொது மகள், குலமகள் என்ற கற்பு வட்டத்தில் சுழலும் செக்கு மாடாக்கி இருக்கின்றன. பழங்காலத்தில் எண்ணெய்ச் செக்கை இழுக்கச் சூழலும் மாடுகள், எள் நெய்ப் பிண்ணாக்கு மணம் வாசம் மூக்கிலேற, வட்டம் விட்டு மிரள முற்படும். சுளீரென்று சாட்டையடி விழும். மாடு தலைகுனிந்து தன் வட்டத்தைத் தொடரும். இதுவே பெண்ணின் நிலைமை.

இந்த உடல் மொழியை, தாயின் வடிவ ஆராதனைத் துதிப்பாடல்களிலும் காணலாம். துறவியரின் ஆக்கமாக, தாய் வடிவ ஆராதனையானாலும் பெண்ணுடல் அங்கே பவித்திரமாகிறது. இன்னொரு வகையில், பெண்ணுடலின் போகங்கள் அணுஅணுவாக விரிந்து, காமச் சேற்றில் ஒர் ஆணை அழுத்தும் நரகாகவும், அந்தக் குழியில் இருந்து இவரை மேலேற்றிவிட்டு குமரனின் பெருங்கருணையில் முடிவு பெறும். அந்தப் பெருங்கருணையை விளக்க, அத்துணை இழிவுகளைப் பெண்ணுடலம் சுமக்கும்.

இதுபோல் தம் கவித்திறனைக் காட்ட எந்தப் பெண்ணும் துணிந்ததில்லை. மாறாக, தம்மை அழுத்தி இழிமைப்படுத்தும் கருத்தியலை மனமுவந்து ஏற்றவர்களாக, அதே பாடல்களை இவர்களும் பாடிப் பரவசமெய்தினார்கள்.

ஆண்டாளும், மீராவும் அக்கமாதேவியும் துணிச்சலானவர்கள் என்று ஒப்புக் கொள்ளப்பட்டாலும், ஒரு சிலர், தமிழில், ஆண்டாளின் புனிதத்துவத்தைக் காக்க, அந்தப் பாடல்களைப் பாடியவர், பெரியாழ்வார் தாம் என்றும் கருத்துரைத்தார்கள்.