பக்கம்:மேனகா 2.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதாள எட்சினி வசியம்

201

மூலையில் சாமாவையரும் பெருந்தேவியம்மாளும் உட்கார்ந் திருந்ததை மந்திரவாதி கண்டு, தம்மை ஐயர் பார்க்காமலிருக்கும்படி வேறு திக்கில் தமது முகத்தைத் திருப்பிய வண்ணம், அவர்களது சம்பாஷணையைக் கவனித்தார். அரை நாழிகை சென்றது. அதுவரையில் வேறு பல பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன. அதன் பிறகு சேவகன் வாசற்படியில் நின்று கொண்டு, “கப்பல்கார நூர்முகம்மது மரைக்காயர்” என்று கூவினான்; உடனே சாமாவையர் பெருந்தேவியம்மாள் ஆகிய இருவரும் தடபுடலாக எழுந்தனர். அப்போது கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு முகம்மதியர் உள்ளே நுழைந்தார்; அவருக்குப் பின்னால் சாமாவையரும், இன்னொரு மனிதரும் தொடர்ந்து உட்புறம் சென்றனர். அந்த முகம்மதியர் மிகவும் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்திருந்தார். ஆனால், அவரது உடம்பு மிகவும் இளைத்து சுகவீனத்தைக் காண்பித்தது. தேகம் கருப்பாயும், தசைப் பிடிப்பற்றதாயும், முரடாயும், அநாகரீகமாயும் காணப்பட்டது. அவரது உடைகள் மாத்திரம், அவர் பெரிய மனிதரென்பதைக் காட்டியதன்றி அவரது தோற்றமோ பக்கிரித் தோற்றமாக இருந்தது. அவர் உள்ளே சென்று சப் ரிஜிஸ்டிராருக்கு எதிரில் நின்றவுடன், விசாரணை ஆரம்பமாயிற்று.

சப்.ரி:- நீர்தான் நூர் முகம்மது மரைக்காயரா?

முகம்மதிய:- ஆம் நான்தான்.

சப்.ரி:- உம்முடைய ஊர் எது?

முக:- நாகைப்பட்டணம்.

சப்.ரி:- தகப்பனார் பெயரென்ன?

முக:- கச்சி மொகிதீன் மரைக்காயர்.

சப்.ரி:- உம்முடைய தொழில் என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/202&oldid=1252361" இலிருந்து மீள்விக்கப்பட்டது