உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

மேனகா

களைப்பு தோன்றி யிருக்கிறது; நூர்ஜஹான் பால் தயாராக இருந்தால் கொஞ்சம் வரவழை” என்றாள்.

அடுத்த நிமிஷம் காய்ச்சப்பட்ட நல்ல பசுவின் பால் வந்து சேர்ந்தது. துரைஸானி அதைக் கையில் எடுத்துக்கொண்டு மேனகாவின் வாய்க்கருகில் கொண்டுபோய், “மேனகா வாயைத் திற” என்றாள். அவள் கண்ணைத் திறவாமலே வாயைத் திறந்தாள். உடனே துரைஸானி பாலில் சிறிது அருந்துவித்தாள். “சரி! இதுபோதும்! நாளைக்குள் உடம்பு குணமடைந்துவிடும். இப்போது நான் அவசரமாகப் போக வேண்டும். இன்று ராத்திரி முழுவதும் அந்த மனிதருக்கருகில் இருந்து கவனிக்க ஒரு தாதியை அமர்த்தவேண்டும். நான் போகிறேன். நாளைக்குக் காலையில் நான் இங்கு வரவேண்டுமானால் ஆளனுப்பு” என்று சொல்லிக்கொண்டு வாசலை நோக்கி நடந்தாள்.

நூர்:- அப்படியே செய்கிறேன். அந்த மனிதர் யாரென்பது தெரிந்ததா? - என்றாள்.

துரை:- ஆம் தெரிந்தது; அவர் தொளசிங்கப்பெருமாள் கோவில் தெருவிலுள்ள ஒரு வக்கீலாம், பிராமண ஜாதியைச் சேர்ந்தவராம். அவருடைய பெயர் என்னவென்றோ சொன்னார்கள். (சிறிது யோசனை செய்து) ஆம், ஆம். வராகசாமி ஐயங்காராம் - என்றாள். அந்த சொல்லைக்கேட்ட மேனகா, "ஐயோ என் புருஷனல்லவா’ என்று அலறிக் கெர்ண்டு நாற்காலியை விட்டு விசையாக எழுந்தாள். நூர்ஜஹானும் துரைஸானியும் முற்றிலும் திகைப்படைந்து அவளிடம் ஓடிவந்தார்கள்.


★★★★★★★★★★★★
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/24&oldid=1251488" இலிருந்து மீள்விக்கப்பட்டது