உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




18 வது அதிகாரம்

டம்பாச்சாரி விலாசம்


“நண்டுக்குத் திண்டாட்டம்; நரிக்குக் கொண்டாட்டம்” என்று ஜனங்கள் ஒரு பழமொழியை வழங்குதல் உண்டு. அவ்வாறு வராகசாமி வண்டியில் அறைபட்டு, முழங்காலை ஒடித்துக் கொண்டு, வைத்தியசாலையிற் கிடந்து உயிருக்கு மன்றாடிய தருணத்தில், அவனது அரிய சகோதரிமாரிருவரும் சாமாவையரும் அவனுக்கு மறுகலியாணம் செய்வதற்குரிய ஏற்பாடுகளையும் அவன் வீட்டிற்குத் திரும்பி வருவதற்குள் பங்களாவை வாங்கிக்கொண்டு அதற்குப் போய்விடுவதற்குரிய காரியங்களையும் செய்யத் தொடங்கினர். வராகசாமி அவசியம் பிழைத்துக்கொள்வானென்றும், பத்துப் பதினைந்து நாட்களில் அவனைப் பங்களாவிற்கு அழைத்துவந்து விடவேண்டு மென்றும் அவர்கள் நினைத்தனர். வராகசாமி வீட்டிலிருந்தால் அவன்பொருட்டு ஒவ்வொரு நாளும் இரண்டு முறை சமையல் செய்வதில் அப்பெண்டீர் தமது பொழுதைப் பெரும்பாலும் போக்குவர். இப்போது அவனில்லாமையால் விடுமுறை பெற்றவர் போல, தாமே அரசாய்க் காரியங்களை நடாத்தி மூன்று நாட்களுக் கொருமுறை சமையல் செய்வதும், பட்சணம் பலகாரங்களைத் தயாரித்துத் திண்பதும், சாம்பசிவம், கனகம்மாள் முதலியோருக்குச் சென்னையில் நேரிட்ட துன்பங்களைப்பற்றிப் புரளிசெய்து கைகொட்டி நகையாடு வதும், பங்களாவில் கலியாணத்தை ஆடம்பரமாகச் செய்வது பற்றி சாமாவையரிடம் வாதுகள் செய்வதும், வண்டியில் அறை பட்ட வராகசாமியின் மூடத்தனம் குறித்து ஏளனம் செய்வதும் வேலைகளாகச் செய்து தமது பொழுதை நித்திய கலியாணமாகப் போக்கிக் கொண்டிருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/25&oldid=1251837" இலிருந்து மீள்விக்கப்பட்டது