பக்கம்:வெறுந்தாள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறுந்தாள் [1] வாழ்க்கை இதற்கு அர்த்தம் பொருள் என்ன என்பதே விளங்கவில்லை. நான் படிக்கும்பொழுது தமிழாசிரியர்கள் பாட்டுச் சொல்லிப் பதவுரை, விளக்கவுரை இலக்கணம் எல்லாம் சொன்னார்கள். அது எனக்கு விளங்கியது. ஆனால் இந்த வாழ்க்கையின் அர்த்தம்தான் தெரியவில்லை. அன்று சரசுவதி என்னிடம் நிரம்ப நேரம் பேசினாள். அவள் எதை எதையோ பேசினாள். அவள் ஒரு இலக்கியப் பைத்தியம். நாவல் சிறுகதை என்றால் உயிர். 'எனக்கு வாழ்க்கையிலே நிம்மதி இல்லை; சில சமயம் பொழுது போவதே கஷ்டமாக இருக்கிறது' என்று சொல்கிறாள். அவள் ஒரு விதவை, ஆனால் அவள் அதற்காகக் கவலைப்பட்ட நாட்கள் சிலதான். அவளிடம் அழகு அபரிமிதமாக இருந்தது. அதனால் அவளால் விதவை யாகவே காலம் கடத்த முடியாமல் போய்விட்டது. அப்படி அவளை விதவையாக விட்டுவைப்பது சமூகத்துக்கு ஒரு அபாயம் என்பதை உணர்ந்து அவளை மற்றொருவர் அது தான் இப்பொழுதைய கணவர் மணம் செய்து கொண்டார். அவளே சொல்கிறாள் 'நான் விதவையாகவே காலம் கடத்த முடியுமா? நீங்கள் எண்ணிப்பாருங்கள்' என்று கேட்கிறாள். நான் எப்படிச் சொல்வது? மரியாதைக்காக 'ஏன் முடியாது?' என்று கேள்வியைக் கேட்டு வைத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/10&oldid=914494" இலிருந்து மீள்விக்கப்பட்டது