உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் கேணி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தத்தா கமரே காண்

11

என்ற வாயிற் காவலன் 'அரசர் உறங்கும் நேரம் இது;சமயமறிந்து செல்லவேண்டும் என்று தடுத்தான். இத்தடையையும் பொருட்படுத்தாது முத்தநாதன் உள்ளே சென்றான், நாயனாருடன் இருந்த தேவியார் நாயனாரைத் துயிலெழுப்பினார். நாயனார் எழுந்து அடியாரைச் செங்கை கூப்பி வணங்கித் 'தாங்கள் வந்த காரணம் என்ன ?' என்று வினவினார். முத்தநாதன், ' உங்கள் இறைவர் முன் அருளிய ஆகமங்களுள் ஒன்று என்னிடம் உள்ளது: எங்கும் காணப்படாதது. அதனை உனக்கு அறிவிக்க வந்தேன்' என்றான்; 'நாம் அதனை உனக்கு உபதேசிக்கும் பொழுது உன் தேவி இருத்தல் கூடாது' எனவும் கூறினான். தேவியாரும் அரசனிடம் விடைபெற்று ஏகினாள். வஞ்சகன் புத்தகம் அவிழ்ப்பான் போலப் பாசாங்கு செய்து நாயனார் வணங்கும் பொழுதில் மறைத்திருந்த வாளையுருவித் தான் நினைத்த செயலை முடித்தான்.

தத்தா! நமர்

தத்தன் உள்ளே சென்ற அடியார் மேலேயே மனம் வைத்தவன் ஆகையால் நிகழ்ந்ததைக் கண்டதும் அவ்வஞ்சகனைக் கொல்ல வாள் எடுத்தான். குருதி சோர விழும் நிலையில் இருந்த நாயனார், "தத்தா நமர்" எனத் தடுத்து விழுந்தார் ; பின்னும் "இவ்வடியாருக்கு எவராலும் தீங்கு நிகழாதவாறு காத்து, இவரைக் கொண்டு செல்க" என்றும் அருளினார். தத்தனும் நாயனாரின் கட்டளைப்படி நடந்தான். இதுவே மெய்ப்பொருள் நாயனாரின் வரலாறு.