பக்கம்:இலக்கியக் கேணி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

இலக்கியக்கேணி


" தஞ்சை திருவுடையான் கடிகை வேளான் பக்கல் விலை கொண்ட இந்நாயனார் தேவதானம் கண்ட ராதித்தச் சதுர்வேதி மங்கலத்துப் பிடாகை உலகுய்ய வந்த சோழநல்லூர்ப் பிறிந்த பொன்னார்மேனி விளாகத்துக் கண்டராதித்த வதிக்குக் கிழக்கு: குலமாணிக்க வாய்க்காலுக்கு வடக்கு ; ஆறாங்கண்ணுற்று இரண்டாம் சதிரத்தும், ஏழாம் கண்ணாற்று இரண்டாம் சதிரத்தும் நிலம் அரைமா. ”

காவிரி ஆற்றிலிருந்து நாள் ஒன்றுக்கு ஒரு குடம் திருமஞ்சனம் கொணர்தற்காக இப் பொன்னார் மேனி, விளாகத்தில் இருந்த அரைக்காணி நிலம், தானமாக ஹொய்சள வீரராமநாத தேவர் காலத்தில் விடப்பெற்ற தென இன்னொரு கல்லெழுத்து அறிவிக்கிறது .

முடிப்புரை

இதுகாறும் கண்ட வாற்றால் பொன்னார் மேனி என்ற சுந்தரர் வாக்குப் பலராலும் பலபடித்தாக நினைவு கூர்ந்து போற்றப் பெற்றமை தெள்ளிதின் உணரப் பெறுகின்றது. இங்ஙனம் சமயகுரவர் வாக்குகளை நினைந்து போற்றுதல் கற்றறிந்தோரது கடமையாகும்.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

(சுந்தரர்).

lo S. I. I. Vol V No. 658.