உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் கேணி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரிப் பெருமாள்

57

 உள்ளன. இனிச் சைவ சித்தாந்த சாத்திர நூல்களுட் சிறந்ததாகிய சிவஞான சித்தியார் என்பது ஸ்ரீ அருணந்தி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. இச் சாத்திரம் மறைஞான தேசிகர், ஞானப்பிரகாச முனிவர், சிவாக்கிர யோகிகள், சிவஞான முனிவர், நிரம்ப வழகியார், சுப்பிரமணிய தேசிகர் ஆகிய அறுவருடைய உரைகளைக் கொண்டு மிளர்கிறது. இந்நூல்கள்போலப் பலவுரைகளுடன் திகழும் மாட்சிமை பொருந்திய நூல்களுள் திருக்குறளும் ஒன்று.

முதுமொழி

இத் திருக்குறளை நம் முன்னோர் முதுமொழி என்று குறித்தனர். நரிவெரூஉத்தலையாரும், "இன்பம் பொருளறம் வீடென்னும் இந்நான்கின், முன்பறியச் சொன்ன முதுமொழி நூல்" என்றார். திருக்குறளைப் பின்னி ரண்டடிகளிற் பெய்து, முன்னிரண்டடிகளில் அக்குறட் கருத்தை விளக்குதற்குரிய கதைக் குறிப்புக்களை யமைத்து முதுமொழி வெண்பாக்களைப் பாடித் திருக் குறளைப் பரப்ப முயன்றனர், தமிழ்ப் புலமை சான்ற பெரியோர்கள். இத்தகைய முதுமொழி வெண்பாக்கள் பல; அவை சோமேசர் முதுமொழி வெண்பா, தினகர வெண்பா, இரங்கேச வெண்பா, முருகேசர் முதுநெறி வெண்பா, திருமலை வெண்பா, திருத்தொண்டர் வெண்பா, முதுமொழி மேல்வைப்பு முதலியன.

புலவர் சிறப்புரை

"திருக்குறளைக் கற்றாலே போதும், வேறு நூல்களைக் கற்கவேண்டா" வென்றனர் தமிழ்ப் புலவர்கள்.