பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாதவி யனுப்பிய தூதர்

55

அந்தணன் ஐயந்தெளிதல்

அக்கோசிகன் ஒருபாற் படர்ந்திருந்த குருக்கத்திக் கொடியின் அருகே நெருங்கினான். அதன் மற்றொரு பெயராகிய ‘மாதவி’ என்பதைச் சொல்லி விளித்தான். மாதவிக் கொடியே! நீ இந்த வேனிலால் வெதும்பிக் கோவலனைப் பிரிந்து கொடுந்துயர் அடைந்து வருந்தும் மாதவியைப் போன்றே மலரிழந்து வாடுகின்றனையே!” என்றான்.

‘கோவலன் பிரியக் கொடுந்துயர் எய்திய
மாமலர் கெடுங்கண் மாதவி போன்றில்
வருந்திறல் வேனிற் கலர்களைங் துடனே
வருந்தினை போலும் நீ மாதவி!’

என்று கோசிகன் அக்கொடியை நோக்கிக் கூறினான்.

கோவலன் கோசிகன் உரையாடல்

இச்சொற்களைக் கேட்டதும் கோவலன் திரும்பிப் பார்த்தான். கோசிகனை நோக்கி, “நீ இப்பொழுது இயம்பியது என்ன?” என்று ஆவலொடு வினாவினான். உடனே கோசிகன் ஐயம் நீங்கி, அவனே கோவலன் என்று தெளிந்து நெருங்கிச் சென்று நிகழ்ந்தவற்றையெல்லாம் மொழிந்தான்.

“ஐயனே! இருநிதிக் கிழவனான நின் தந்தை மாசாத்துவானும், மனைமாட்சி மிக்க தாயும் நின்னைப் பிரிந்து மணியிழந்த நாகம் போன்று ஒளியிழந்து வருந்துகின்றனர். உயிரிழந்த உடலைப் போன்று உன் உறவினரெல்லாம் செயலற்றுத் துயர்க் கடலில் மூழ்கினர். தந்தை நின்னைத் தேடிக்கொண்டு வர ஏவலாளரை எங்கும் அனுப்பினான். தந்தையாகிய தயரதன் சொல்லைக் காத்தற்காகக் கானகம் புகுந்த மானவனாம் இராமனைப் பிரிந்த அயோத்தி போன்று,