பக்கம்:எழில் விருத்தம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழில் விருத்தம்

29

கத்தும் கடலின் ஓரத்துக்
   கரையில் வாழும் சுழல்விளக்கே !
முத்துக் குவியல் கண்டிருப்பாய்;
   முதிர்ந்த பவளக் காட்டிடையில்
செத்த மனிதர் கண்டிருப்பாய்;
   சிதைந்த கலங்கள் கண்டிருப்பாய் !
பொத்தி வாயைத் திறவாமல்
   பொறுத்தால் நெய்தல் பொறுத்திடுமோ?....................................... 6

நெய்தற் பேரூர்க் கரையோரம்
   நிமிர்ந்து நிற்கும் சுழல்விளக்கே !
வையம் எங்கும் உன்னினத்தார்
   கடலின் மருங்கே வாழ்ந்தாலும்
கையாம் ஒளியின் கதிர்வீசிக்
   கரையின் ஊரை அறிவிக்கும்
பொய்யில் மொழியை நாவாய்க்குப்
   புரியச் செய்தல் புதுமையதே !........................................................ 7

காலம் எல்லாம் கரையிருந்தே
   கலத்தைக் காக்கும் சுழல்விளக்கே !
ஏலம் மிளகை மலைத்தேக்கை
   இருண்ட கடலின் ஒளிமுத்தைக்
கூலப் பொருளை மாமயிலைக்
   கொம்பைக் கொடுத்தே குதிரைகளை
ஏலக் கொண்ட தமிழ்நாட்டின்
   துறைகள் இருண்ட வகைஎன்னே?................................................ 8