பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 - கம்பர் வரிசையாக முதல் நாற்பது நீதிகளை வைக்கக் கூடாதா? அறுஞ்செய விரும்பு. இயல்வது கரவேல், ஊக்கமது கைவிடேல், கண்டொன்று சொல்லேல் என்று இவ்வாறு தாண்டித் தாண்டிப் பொறுக்கிப் போடுவதால் என்ன நயம் உண்டு? முறை மாறி அமைப்பதால், மறுபடி குழந்தைகள் வரிசையாக வரப்பண்ணுதற்கு இடர்ப்பாடு ஆகின்றது. நூலாசிரியர் நோக்கமும் ஈடேறவில்லை. இங்ங்ணம்தான் எந்த நூலை எடுத்தாலும் பொறுக்கு மனப்பான்மை தோன்றுகின்றது. பாடம் அளவாக இருந்தாலும் நிரலாக இருக்கவேண்டும் என்பது என் கருத்து. கல்விச் செம்மையும் அறிவு வளர்ச்சியும் பர்டவமைப்பைப் பொறுத்துப் பெரும் பாங்கு உள்ளது. ஒரு வகுப்பிற் படித்த பாடங்களே மறுமறு வகுப்புகளுக்கும் வருவதால் முறையான அறிவு வளர்ச்சியில்லை. திருக்குறளிற் சில அதிகாரங்களும், புறநானூற்றிற் சில பாடல்களும், சிலப்பதிகாரத்திற் சில காதைகளும், இராமாயணத்திற் சில பட்லச் செய்யுட்களும் இவ்வாறே பெரியபுராணம், திருவிளையாடற் புராணம், பாரதம், நளவெண்பா, மனோன்மணியம் முதலிய நூற்பகுதிகளும் வந்தனவே மீண்டும் மீண்டும் பாடத்திட்டத்தில் தலையெடுக்கின்றன. அதனால் இளங்கலை, இளமறிவியல் வரை ' பதினைந்தாண்டுக்காலம் படித்தும் மாணவர்களுக்கு எந்த முழுநூற் பயிற்சியும் இல்லாது போதல் வருந்தத்தக்கது. இன்ன வகுப்பிற்கு இன்ன திருக்குறள், இன்ன புறநானூறு, இன்ன இலக்கியப் பகுதி, இன்ன சூத்திரம் என முறையாக நிரலாக வகுத்துப்பாட ஒழுங்குபடுத்திக் கொண்டால், பதினைந்தாண்டு கற்கும் மாணவன் திருக்குறள் முழுநூலைக் கற்றாகலாம்; சிலப்பதிகாரத்தில் ஒரு காண்டமும், இராமாயணத்தில் பல படலங்களும் கற்றாகலாம். இப்படி வைத்தால் நூல்களைப் போற்றிக் கொள்ளும் உணர்ச்சி ஏற்படும். இப்போது வைக்கும் பாடநூல்கள் தேர்வுக்குப் பின் பழங்கடை நூல்களாக ஆவது நம் பாடத்திட்டத்தின் குறைபாட்டிற்கு நல்ல எடுத்துக்காட்டு. * ... . . . . . . ஆறுமுகநாவலர் பதித்த பால பாட நூல்களை நினைவு கொள்ளுங்கள். ஒரு வகுப்பிற்கு ஆத்திசூடி முழுவதும் இருக்கும். மேல் வகுப்பிற்கு வாக்குண்டாம், அதற்கு மேல் வகுப்பிற்கு நல்வழி அதற்குப் பின் நன்னெறி என முழுமையாக அமைந்திருக்கும். இவ்வமைப்பினால் நம் முன்னோர்கள் ஐந்து வகுப்புப் படித்திருந்தாலும் கற்றவை மறவாது மொழியறிவிற் சிறந்திருந்தனர். இளமையிற் கற்றனவற்றை முதுமையிலும் நினைவுகூரும் ஆற்றல் பெற்றிருந்தனர். கல்வி கேடில் விழுச் செல்வமாக வேண்டுமெனின், ஒட்டுத் துணி போலும் பொறுக்குப் பாடம் சாலாது, முழுத்துணிபோலும் பாடமுழுமை வேண்டும். கல்வி தன்னளவில் என்றும் அழிவற்றது. நிரலற்ற முழுமையற்ற, பற்றற்ற பாடவமைப்பினால் கல்வியும் நிலையற்றதாகி விட்டது.