பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 . கம்பர் வேறு தோன்றாது. பார்வைக்குக் கைகேசி கொடியவள் என்பதை ஒருவாறு ஒத்துக் கொண்டாலும் கற்புக் குறைந்தவள் என்று கூற முடியுமா? ஒழுக்கக் குறைபாடு உடையவள் என்று கூற முடியுமா? கோசலத்தையும் கிட்கிந்தையையும் இலங்கையையும் கம்பர் புனைகின்ற நிலைகளை ஒப்பிட்டுக் காணுங்கள். மூன்று நாடுகளிலும் பெருவளங்கள் உண்டு, ஆனால் கிட்கிந்தை ஒழுக்கச் சிறப்பினதன்று. மன்னனான வாலியே பிறன்மனை நயந்த குற்றம் உடையவன். இலங்கையும் ஒழுக்கப் பண்புடையதன்று. இராவணனே ஆசில் பரதாரத்தை விரும்பிப் போரிட்ட அழிவுக் குற்றமுடையவன். அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி என்றபடி, மன்னர்களின் ஒழுக்கநிலை இவ்வாறாயின் குடிமாந்தர்களின் போக்கு எவ்வாறு இருந்திருக்கும்? அயோத்தி எக்குற்றம் இருப்பினும் ஒழுக்கக் குற்றம் இல்லாதது. இராமாயணம் மூன்று நாடுகளில் நிகழ்கின்றது. அவற்றுள் ஏனை இரண்டுக்கும் இல்லாத அறச்சிறப்பு இராமன் பிறந்த கோசலத்துக்கு உண்டு. இவ்வொழுக்கப் பண்பை முதற்பாட்டிலேயே வெளிப்படுத்துகின்றார் கம்பர். - ஆசலம்புரி யைம்பொறி வாளியும் காசலம்பு முலையவர் கண்ணெனும் பூசலம்பு நெறியின் புறஞ்செலாக் கோசலம்புனை யாற்றணி கூறுவாம் கோசல நாட்டில் ஆடவர்தம் ஐம்புலன்களும் மகளிர்தம் கண்களும் ஒழுக்க நெறிக்கு மாறாக நடவா என்று எல்லா அழகுக்கும் தலையான அழகைப் புனைந்து தொடங்குகின்றார் புலவர். முழுப்பார்வையாகப் பார்க்கும்போது, மூன்று நாடுகளின் புனைவுகளை இணைத்து வைத்துப் பார்க்கும்போது, இத் தனிக்க்ருத்துப் புலனாகின்றது. ஆதலின் கணவன் சாவுக்கு ஒரு காரணமாக இருந்தாலும் கைகேசியைக் கற்புக் கெட்டவள் என்று சொல்ல முடியாது. புலவன் பார்வை காப்பியப் படைப்பில் உள்ள ஓர் அமைப்பை இங்கு எடுத்துக்காட்ட விரும்புகின்றேன். இவ்வமைப்பை எந்தக் காப்பியம் படித்தாலும் நினைத்துக் கொள்ளுங்கள். காப்பியம் படைக்கும் புலவன் முழுக்கதையையும் கருத்திற் கொண்டு எழுதுகின்றான். பின் வருவனவற்றை நன்றாகத் தெரிந்து கொண்டுதான் முன்பகுதிகளை எழுதுகின்றான். அவனுக்குப்