பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியக் களங்கள் - 83 வாழ்த்துப் பெற்றுச் செல்வது என இராமன் எண்ணினானேல், கடை போகுமோ? என்ன நடந்திருக்கும்? இராமன் போவது பொறாது தயரதன் அவன் முன்னேயே உயிர் விட்டிருப்பான். மேலும் ஏதும் நடக்க முடியுமா? ஈமக்கடன் கழியாது வனம் செல்ல முடியுமா? தந்தை யிறப்பைப் பரதனுக்குச் சொல்லிவிடாது இருக்க முடியுமா? பரதன் வந்தபின் அவன் இராமன் வனம் போக ஒருப்படுவானா? இவ்வெல்லாம் நடவாதிருக்கவும் காப்பியம் நடக்கவும் தயரதன் இறப்பைத் தள்ளி வைக்க வேண்டும். இறப்பைத் தள்ளவேண்டும் எனின், இராமன் தயரதனைச் சந்திப்பதைத் தவிர்க்க வேண்டும். களம் ஒன்று காணாது அங்ங்னம் முற்றும் தவிர்த்தார் கம்பர். மணிமேகலையைக் கூறாமை புலவன் படைத்த களங்கள் யாவை? படையாதே விடுத்த களங்கள் யாவை? என்ற இருபெரு நோக்கில் காப்பியவளர்ச்சியை ஆராய வேண்டும். மேனாட்டுத் திறனாய்வாளர்தம் ஆராய்ச்சி யெல்லாம் படைத்த களங்களைப் பற்றியவையே. வெளிப்பட்ட அமைப்புக்களை வைத்துக் கொண்டுதான் அத்திறனிகள் விளக்கஞ் செய்துள்ளனர். காப்பியத் தெளிவுக்கு உண்மைக் களவாராய்ச்சி மட்டும் போதாது. இன்மைக் களவாராய்ச்சியும் உடனிலையாக வேண்டும். இது செய்யாதவரையில் புலவன் நுழைபுலம் வெளிப்படாது. சிலப்பதிகாரத்திலிருந்து ஒர் எடுத்துக்காட்டு. மாதவியின் கானல்வரிப் பாடல் கேட்டு அவளைத் தவறாக உணர்ந்து கோவலன் பிரிகின்றான். பிரிந்தவன் வரவேண்டும் என்று மாதவி மலர்க்கடிதம் எழுதுகின்றாள். 'எல்லா உயிர்க்கும் இன்பம் செய்யும் இளவேனிற் காலத்துத் திங்கள் என்னை வாட்டுகின்றது: மன்மதன் மலரம்பால் என்னை நலிகின்றான்; இதன் குறிப்பு உங்கட்குத் தெரியாதா? என்பது கடிதக் கருத்து. தோழி வசந்தமாலை இக்கடிதத்தைக் கோவலனிடம் சேர்க்கின்றான். இது நடிப்பு மகளின் கடிதம் என்ற கோவலன் மறுத்து விடுகின்றான். கோவலன் கண்ணகியோடு மதுரை சென்றதை அறிந்த மாதவி மற்றுமோர் முடங்கல் கோசிகன் மூலம் விடுக்கின்றாள். கற்பிற் சிறந்த மனைவியுடன் இரவோடு இரவாகப் பெற்றோர்க்கும் சொல்லாது நீர் புறப்பட்டது என் குற்றமா? குற்றமாயின் பொறுத்தருள்க' என்று வேண்டுவது இரண்டாவது கடிதக் கருத்து. இக்கடிதங்களில் ஒரு குறிப்பு ஒழிக்கப்பட்டடுள்ளது. கோவலனுக்கு மாதவிபால் பிறந்தவள் மணிமேகலை. மாதவி முதற் கடிதத்தில் மணிமேகலையைச் சுட்டிக் காட்டி, தங்கள் பிரிவால் குழந்தை அழுகின்றது. அப்பா அப்பா என்று அலமருகின்றது என்று குறிப்பிட்டிருந்தால், கோவலன் குழந்தைக்காகவேனும் மாதவி வீடு