பக்கம்:காணிக்கை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

பொழுது போக்காக எண்ணிக் கொண்டிருப்பது உண்டு. காரில் latest model-என்றால் மிகக் கவர்ச்சி, ஆனால் வாழ்க்கையில் மட்டும் பழமையில் ரொம்பப் பேருக்கு மோகம் ஏற்படுகிறது. அர்த்தமில்லாத விஷயங்களில், அர்த்தம் கண்டு பிடிப்பதைப் பார்க்க முடிகிறது. பழைய கள் போதை தருகிறது என்று சொல்வார்கள்.அது போலப் பழைய விஷயங்கள் மக்களை மயக்க வைக்கின்றது.

எனக்குப் பழைய மாடல் என்றாலே பிடிப்பது இல்லை. நான் என் மனைவியைப் பற்றிச் சொல்லவில்லை. அதற்குள் நீங்கள் தவறாக நினைத்து விட்டீர்கள். நான் காரைப்பற்றித் தான் சொன்னேன். காப்பி ஆறிவிட்டது என்று குறிப்பிட்ட போதுகூட அப்படித்தான் தவறாக நினைத்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

இந்தப் புதுக் கார்களில் எனக்கு ஒரு கவர்ச்சி, இந்த விஷயத்திலே என்னிடம் பெண்மை குடி கொண்டிருந்தது.

என் கழுத்தில் ஒரு செயின் போட்டுக் கொண்டிருந்தேன். அதிலே எனக்கு ஒரு தனி கவர்ச்சி, எங்க அப்பா இருக்கும் பொழுதே நான் அதைக் கேட்டுப் போட்டுக் கொண்டேன். அதில் ஒரு டாலர் தொங்கிக் கொண்டிருந்தது. அதில் ஒரு சாயிபாபா படம் என்று நினைக்கிறேன். அதைத் தொங்க விட்டு இருந்ேதன். ஏன் அவர் படத்தைப் போட்டேன் என்று கேட்டார்கள். கேட்கவில்லை. நானே சொல்லி விடுகிறேன்.

நானிருக்க பயமேன்? என்று குரல்கொடுத்த மகான் அவர்தானே, யாருமே இதைப் போலச் சொன்னதே இல்லை. கடவுள் கூட வாய் திறந்து இப்படிப் பேசியது இல்லை. இந்த நாட்டு அரசியல் மேதைகள்: பதவி ராஜாக்கள் ஒரு நாள் கூட இப்படிப் பேசியது இல்லை. "நாங்கள் இருக்கிறோம் பயப்படாதீர்கள்" என்று யாருமே சொல்லியது இல்லை. அவர்களால் சொல்ல முடியாது. அது எப்படிச் சொல்ல முடியும் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/29&oldid=1321278" இலிருந்து மீள்விக்கப்பட்டது