பக்கம்:காணிக்கை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

உண்மை என்று பட்டால் அவர்களுக்குத் தக்க தண்டனை தந்துதான் தீரவேண்டும்' என்று கூறுகிறாள்.

பெண் அரசியல் பேசுவது எனக்கு வியப்பாக இருந்தது. கடற்கரையில் காதல் பேசுவாள் என்று எதிர்பார்த்து தான் அவளைச் சந்தித்தேன். அடிக்கடி சந்திப்போம். அவளுக்கு அரசியல்தான் அதிகம் பிடிக்கும். மற்றொன்று இலக்கியம். இலக்கியம் எனக்குத் தெரியாது. அரசியல் கொஞ்சம் சொன்னால் புரிந்து கொள்வேன்.

“உங்களை எனக்கு பிடித்து இருக்கிறது” என்று கூறுவாள்.

அவள் என்னை ஸ்கூட்டரில் பிடித்த போதே அது எனக்குத் தெரிந்த விஷயம். அவள் அதைச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை.

அவளே வழி மறித்துப் பாஞ்சாலி சபதம் நாடகம் நடத்தியதிலிருந்து இந்த வன்முறைகளைக் கண்டால் அவளுக்கு ஒரே வெறுப்பு. இவர்கள் எல்லாம் காட்டு மிராண்டிகள் என்று கூறுகின்றாள்.

அவள் என்னைப் ‘பதினறு வயதா' என்று கேட்டதால் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்தேன். அந்தப் படம் மிகச் சிறந்த படம் என்று சொன்னார்கள்.

படம் சிறந்ததுதான்; டாக்டர் அவளைக் கெடுக்க முயற்சி; அதனால் அந்த வாழ்க்கை நாசமாகியது. ஏதோ எங்கோ ஒரு நாவல் அதுதான் சினிமாவாக வந்ததே அந்தக் கதையின் சாயல். அதே ஆசிரியர் 'என் ராஜா வருவார்' என்று எழுதிய சிறுகதையின் சாயல். கதை இந்த வகையில் 'காப்பி’ என்று பட்டது. அதை அவள் ஒப்புக்கொள்ளவில்லை. "நீங்கள் அந்தக் கதை படித்தது குற்றம்” அதனால் அதை வைத்து இதைப் பார்க்கிறீர்கள் என்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/44&oldid=1325564" இலிருந்து மீள்விக்கப்பட்டது