பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

46

உலோகக் கலவைகள் - உலோகங்கள்

அதிக வெப்பம் வேண்டும். அத்தகைய வேலைகளுக்கு மின்சார உலைகளே ஏற்றவை. மின்சார உலைகளில் புகையும் இருக்காது. இதனால் தங்கம், பிளாட்டினம் போன்ற உயர்ந்த வகை உலோகங்கள் மாசு இல்லாமல் இருக்கும்.

சுண்ணாம்பு, சிமென்டு முதலியவற்றைத் தயாரிக்கப் பயன்படுபவை சூளைகளாகும். உலைகளைப் போன்றே இவற்றிலும் கரி, எரிவாயு முதலியவற்றை எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். விறகுகளையும் எரிப்பது உண்டு.


உலோகக் கலவைகள்: பித்தளையால் செய்த பல பொருள்களை நாம் பயன்படுத்துகிறோம். கதவுக் கைப்பிடி, குவளைகள், தட்டுகள், கரண்டிகள் இப்படி எத்தனையோ பொருள்கள் பித்தளையால் செய்யப்படுகின்றன. எஃகினால் செய்த கத்தி, அரிவாள், எந்திரங்கள் முதலியவற்றையும் பயன்படுத்தி வருகிறோம். பித்தளையும் எஃகும் தனி உலோகம் போல் தோன்றும். ஆனால் அவை தனி உலோகம் அல்ல. செம்புடன் துத்தநாகம் என்னும் இன்னொரு உலோகத்தைச் சிறிதளவு சேர்ப்பதால் கிடைக்கும் ஒரு கலவையே பித்தளை. அதேபோல் இரும்புடன் கரியைச் சிறிது கலப்பதால் உண்டாகும் கலப்புப் பொருளே எஃகு. இப்படி ஓர் உலோகத்துடன் வேறு உலோகங்களைச் சேர்த்து ஓர் உலோகக் கலவை உண்டாக்கலாம்.

எஃகு செய்வதற்கு இரும்பும் கரியும் பயன்படுகின்றன அல்லவா? ஆனால் கரி ஓர் உலோகம் அல்ல. உலோகமல்லாத பொருளுக்கு அலோகம் என்று பெயர்.

சில உலோகங்கள் சுத்தமான நிலையில் உறுதியாக இரா. அவற்றுடன் வேறு உலோகம் அல்லது அலோகத்தைக் கலந்து உலோகக் கலவையாக்கினால்தான் அவற்றைப் பயன்படுத்த முடியும். சுத்தத் தங்கத்தில் நகை செய்ய முடியாது. அதனுடன் குறிப்பிட்ட அளவு செம்பு சேர்த்தால்தான் அது உறுதியாக இருக்கும். பதினோரு பங்கு தங்கத்துக்கு ஒரு பங்கு செம்பு வீதம் கலக்கவேண்டும். அக்கலவையைக் கொண்டு நகை செய்யலாம். அதே போல் ஒன்பது பங்கு வெள்ளிக்கு ஒரு பங்கு செம்பு வீதம் கலந்த கலவையைக் கொண்டு நகைகளும், பாத்திரங்களும் செய்கிறார்கள்.

கோயில் மணிகள் வெண்கலம் என்னும் உலோகக் கலவையினால் செய்யப்படுகின்றன. எட்டுப் பங்கு செம்புக்கு இரண்டு பங்கு வெள்ளீயம் வீதம் கலந்த கலவையே வெண்கலம். இக்கலவை மிகவும் கெட்டியானது; ஆனால் இது எளிதில் உடையக் கூடியது. எனினும் இது நல்ல ஓசை தரும்.

உலோகக் கலவைகளில் எஃகு முக்கியமானது. இரும்பைவிட எஃகு உறுதியானது. எனவே இதைக் கொண்டு எந்திரங்கள் செய்கிறார்கள்.

அலுமினியம், மக்னீசியம் இரண்டும் இலேசான உலோகங்கள். அலுமினியத்துடன் சிறிது மக்னீசியத்தைச் சேர்த்தால் டியூராலுமினம் என்ற உலோகக்கலவை கிடைக்கிறது. இது அலுமினியம்போல் இலேசானது. ஆனால் அதைவிடப் பலமடங்கு உறுதியானது. எனவே ஆகாய விமானம், கப்பல் முதலியவற்றைக் கட்டுவதற்கு இதைப் பயன்படுத்துகிறார்கள்.

காரீயமும், அன்டிமனியும் கலந்த கலவையில் துப்பாக்கிக் குண்டுகள் செய்கிறார்கள். அச்சு எழுத்துகள் செய்யக் காரீயக் கலவைகள் பயன்படுகின்றன. பாஸ்வரம், சிலிக்கன் போன்ற அலோகங்களைச் சேர்த்தும் சிலவகை உலோகக்கலவைகள் உண்டாக்கப்படுகின்றன. திரவ உருவத்தில் உள்ள ஒரே உலோகம் பாதரசம். இதைக் கலந்தும் சில கலவைகளை உண்டாக்கலாம். இக்கலவைகளுக்கு ரசக்கலவை (Amalgam) என்று பெயர்.

இன்றைய வாழ்க்கையில் உலோகக்கலவைகளின் பயன்கள் பெருகிவிட்டன. புதிய உலோகக் கலவைகளை உண்டாக்கும் முறைகளையும், அவற்றைப் பயன்படுத்தும் வழிகளையும் கண்டுபிடிப்பதில் பல விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சிக்கு உலோகவேலைக் கலை (Metallurgy) என்று பெயர்.


உலோகங்கள்: தங்கம், வெள்ளி இவற்றைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இவை உலோகங்கள் ஆகும். இன்னும் இரும்பு, செம்பு, காரீயம், வெள்ளீயம், யுரேனியம் போன்ற வேறு பல உலோகங்களும் உள்ளன. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட தனிமங்களில் (த.க.) பெரும்பாலானவை உலோகங்களே.

வெப்பமானிகளில் பயன்படுத்தப்படும் பாதரசம் ஓர் உலோகமேயாகும். திரவ நிலையில் இருக்கும் உலோகம் இது ஒன்றே. மற்ற உலோகங்கள் எல்லாம் இரும்பு, தங்கம் போல திட நிலையில் இருக்கின்றன.

உலோகங்கள் பெரும்பாலும் நிறமற்றவை. சில உலோகங்களுக்கே நிறம் உண்டு. தங்கம் மஞ்சள் நிறம்; செம்பு ஒரு வகையான சிவப்பு நிறம் கொண்டது. எல்லா உலோகங்களும் பளபளப்பாக இருக்கும். ஆனால் இவற்றைக் காற்றுப்படும்படி வைத்தால் துருப்பிடிக்கும். தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகிய ஒரு சில உலோகங்களில் துருப்பிடிக்காது. இந்த உலோகங்களைக் கொண்டு நகைகள் செய்கிறார்கள்.