பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

48 உள்ளெரி எஞ்சின்- உளவியல்


உள்ளெரி எஞ்சின் இயங்கும் விதத்தைப் பார்ப்போம். எஞ்சினில் கார்புரேட்டர் என்ற ஒரு கருவி உள்ளது. இது பெட்ரோலையும் காற்றையும் தகுந்த அளவில் கலந்து, சிலிண்டர் என்ற உருளைக்குள் செலுத்தும். சிலிண்டரில் ஒரு பிஸ்ட்டன் தண்டு உண்டு, அது மேலும் கீழும் நகரக் கூடியது. கார்புரேட்டரிலிருந்து பெட்ரோலும் காற்றும் கலந்த கலவை ஒரு வால்வு வழியாக சிலிண்டருக்குள் வந்து நிரம்பும் (படம் 1). அப்போது பிஸ்ட்டன் மேல்நோக்கி வந்து எரிபொருளை அழுத்தும். அதனால் வால்வு மூடிக்கொண்டுவிடும் (படம் 2). அப்போது எரிபொருள் நன்றாக அழுத்தப்படுகிறது. இந்த அதிஅழுத்த நிலையில் சிலிண்டருக்குள் ஒரு மின்பொறி உண்டாக்கப்படும் (படம் 3). உடனே எரிபொருள் எரியும். அதனால் சூடான வாயுக்கள் உண்டாகி பிஸ்ட்டன் கீழ் நோக்கித் தள்ளப்படும்; பிஸ்ட்டனோடு இணைக்கப்பட்ட சக்கரமும் சுழலும். மீண்டும் பிஸ்ட்டன் மேலே வரும்போது சிலிண்டருக்குள்ளிருந்த வெப்பமான வாயுக்கள் வேறொரு வால்வு வழியாக வெளியேறி விடும்(படம் 4), மீண்டும் முன்போலவே பிஸ்ட்டன் கீழே சென்றுவிடும். எரிபொருள் உள்ளே வரும். அது அழுத்தப் படும்போது மின்பொறி உண்டாகும். எரிபொருள் எரிந்து பிஸ்ட்டனைக் கீழே தள்ளும்; சக்கரம் சுழலும். இவ்வாறு சக்கரம் தொடர்ச்சியாகச் சுழல கார் ஓடுகிறது.

நீராவி எஞ்சினைவிட உள்ளெரி எஞ்சின் அதிக சக்தி வாய்ந்தது. உள்ளெரி எஞ்சினில் மூன்று வகை உண்டு. (1) பெட்ரோல் எஞ்சின்: கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், சில விமானங்கள் ஆகியவற்றில் இவ்வகை எஞ்சின் உண்டு. (2) டீசல் எஞ்சின்: கனரக எந்திரங்கள், கப்பல்கள், சில ரெயில் எஞ்சின்கள், பஸ், லாரி முதலியவற்றில் இந்த எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். (3) எரிவாயு டர்பைன்கள்: பெரிய விமானங்களிலும் வேகமாகச் செல்லும் விமானங்களிலும் இவ்வகை எஞ்சின் உண்டு.


உளவியல்: குழந்தைகள் பெரும்பாலும் ஒன்றாகக் கூடி விளையாடுவதையே விரும்புவார்கள். ஆனால் சில குழந்தைகள் யாருடனும் சேராமல் ஒதுங்கிவிடுவார்கள். சில பெரியவர்கள் வினோதமான முறையில் நடந்துகொள்வார்கள். இதற்கெல்லாம் அவரவர்களுடைய உள்ளமே காரணம் என்று உளவியல் அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். மனிதனுடைய உள்ளத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும், அவனுடைய உள்ளத்தின் செயல்களையும் ஆராயும் விஞ்ஞானமே உளவியல் ஆகும்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு உளவியல் என்று ஒரு தனிப்பகுதி இருக்கவில்லை. இது தத்துவத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. உளவியல் ஆராய்ச்சி விரிவடையவே உளவியல் என்பது தனி விஞ்ஞானமாக வளர்ந்தது. முன்பெல்லாம் மனித இயல்புக்கு மாறான நடத்தைக்குப் பேய், பிசாசுகள்தாம் காரணம் என்று கருதினார்கள். பைத்தியம் போன்ற மன நோய்கள் சந்திரனின் சக்தியால் உண்டாவதாகவும் எண்ணினார்கள். இவையெல்லாம் மூட நம்பிக்கை என்பது உளவியல் ஆராய்ச்சிகள் மூலம் இன்று தெரியவந்துள்ளது.

உள்ளம் என்பது அனைவருக்கும் உண்டு. ஆனால் எல்லாருடைய உள்ளமும் ஒரே இயல்புடன் இருப்பதில்லை. ஒவ்வொருவரின் உள்ளத்திற்கும் தனித்தனி இயல்புகள் உண்டு. இத்தனி இயல்புகள் என்ன என்பதை உளவியலால் அறியலாம். இதனால், மாணவர்களுக்குப் பள்ளிகளிலும்,