பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

உறக்கம் 49

கல்லூரிகளிலும் அவர்களின் உள்ளப் போக்குக்கு ஏற்பக் கல்வி கற்பிக்க ஆசிரியரால் முடிகிறது. மேலும் அவர்களுடைய ஆர்வம் எந்தத்துறையில் அதிகமாகச் செல்லுகிறதோ, அந்தத் துறையில் அவர்களை ஊக்குவித்து, தக்க பயற்சியளிக்க முடிகிறது. தங்கள் குழந்தைகள் முறையாக வளர்ந்து வருகிறார்களா என்பதைப் பெற்றோர்கள் அறிந்துகொள்ள உளவியல் உதவுகிறது. உள்ளக்கோளாறுகளைக் கண்டுபிடிக்கவும் அவற்றை நீக்கவும் உளவியல் பயன்படுகின்றது. தொழிற்சாலைகளில் தொழிலாளர்களைத் தேர்ந்தெடுத்து அவரவர்களுக்குப் அவரவர்களுக்குப் பொருத்தமான வேலைகளில் நியமிப்பதற்கும் இது உதவுகிறது. ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் முதலியோருக்கும் மற்றத் துறைகளில் உள்ளவர்களுக்கும் உளவியல் பெரிதும் உதவியாக இருக்கிறது.


உறக்கம்: நாம் பகல் முழுதும் பல வேலைகளைச் செய்கிறோம்; நடக்கிறோம்; ஓடுகிறோம்; படிக்கிறேம்: விளையாடுகிறோம். இவற்றால் உடலின் சக்தி செலவழிகிறது. வேலை செய்யும்பொழுது ஏற்படும் கழிவுப்பொருள்களும் உடலில் தங்கிவிடுகின்றன. உடலில் சோர்வு ஏற்படுகிறது. இந்தச் சோர்வை ஓய்வு எடுப்பதன் மூலம் போக்கலாம். உடலுக்குச் சிறந்த ஓய்வு உறக்கமே.

உறக்கம் சோர்ந்த உடலுக்குப் புத்துணர்ச்சி ஊட்டுகிறது. நாள் முழுதும் உழைத்த உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கிறது. இடைவிடாமல் இயங்கும் நுரையீரல், இதயம் போன்ற உறுப்புகள்கூட உறங்கும்பொழுது சற்று மெதுவாக இயங்கி ஓய்வு எடுத்துக்கொள்கின்றன. உடலுக்கு மட்டுமின்றி, பகல் முழுதும் வேலை செய்த மூளைக்கும் உறக்கம் நல்ல ஓய்வை அளிக்கிறது. பழுதடைந்த உடல் உறுப்புகள் உறக்கத்தினால் சீராகின்றன. வேலை செய்தபோது இழந்த சக்தியை உறங்கி எழுந்தபின் நாம் மீண்டும் பெறுகிறோம். போதிய அளவு உறங்காத மனிதன் சோர்வாக இருப்பான்; ஒழுங்காக வேலை செய்யமாட்டான்; அவனுக்கு மறதி உண்டாகும்; அடிக்கடி கோபம் வரும். ஆனால், அளவுக்கு அதிகமாக உறங்கினால் சோம்பல் தான் உண்டாகும்.

ஒவ்வொருவரும் இத்தனை மணி நேரம் உறங்க வேண்டும் என்ற விதி ஏதும் கிடையாது. ஒவ்வொருவரும் தத்தம் வயது, உழைக்கும் நேரம், உடல்நிலை இவற்றைப் பொறுத்து உறங்க வேண்டும். அதிகம் உழைப்பவருக்கு அதிக ஓய்வு தேவை. பொதுவாகப் பெரியவர்கள் எட்டுமணி நேரம் உறங்குவது நலம். குழந்தைகள் பத்துமணி நேரம் உறங்க வேண்டும். பிறந்த குழந்தை பால் குடிக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரத்தில் பெரும்பகுதி உறங்கும். விலங்குகளுக்கும் ஓய்வு தேவை. சில விலங்குகள் உறங்கும் முறை விந்தையாக இருக்கும். வௌவால் தலைகீழாகத் தொங்கிக்கொண்டு உறங்கும். ஒட்டகச் சிவிங்கியும் யானையும் குதிரையும் நின்று கொண்டே தூங்கும். சில பறவைகளின் கால்விரல்கள் இயற்கையாகவே மடங்கியிருக்கும். மரக்கிளையில் அவை உட்கார்த்ததும் விரல்கள் தாமாகவே கிளையைப் பற்றிக்கொள்ளும். அப்படிப் பற்றிக் கொண்டு அப்பறவைகள் உறங்கும். நாம் உறங்கும்போது கண்களை மூடிக்கொள்கிறோம். மீன், பாம்பு இவற்றுக்குக் கண் இமைகள் இல்லை. எனவே இவை கண்களைத் திறந்தவாறே உறங்கும்.

தாவரங்களும் உறங்குகின்றன என்று சொன்னால் வியப்பாக இருக்கிறதல்லவா? தாவரம் பகலில் சூரிய வெளிச்சத்தில் உணவு தயாரிக்கிறது. இரவில் உறங்கி ஓய்வெடுக்கிறது.

[[வெட்டுக்கிளி குழந்தை ஒட்டகச் சிவிங்கி வௌவால் குருவி]]