பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

60 எருமை - எல்லோரா

மலையின் வாயிலிருந்து பூமியின் உட்பாகம் வரை, குழம்பு வெளிவந்த துளை இருக்கும். குழம்பு வெளிவருவது நின்றுவிட்டால் துளையில் குழம்பு நிறைந்து இறுகி, அதை அடைத்துக்கொள்ளும்.

எரிமலை வெடிக்கும்போது கல், தூசி, சாம்பல், கற்குழம்பு முதலியவை வெகுதூரத்திற்கு வேகமாக வீசி எறியப்படும். அப்போது சில சமயங்களில் நாசமும் ஏற்படுவது உண்டு. நிலத்தில்தான் எலிமலை உண்டு என்பது இல்லை. கடலிலும் உண்டு. கடலுக்குள் உள்ள எரிமலைகள் வெடித்தால் பெரியபெரிய அலைகள் எழும். அவற்றால் கடற்கரை ஓரத்தில் உள்ள நகரங்களுக்குச் சேதம் உண்டாகலாம்.

உலகில் சுமார் 500 எரிமலைகள் உள்ளன. பசிபிக் சமுத்திரத்தின் கரையை அடுத்துள்ள பகுதிகளில்தான் எரிமலைகள் அதிகமாக உள்ளன. பசிபிக் நெருப்பு வளையம் என்று இதனைச் சொல்வார்கள். இத்தாலியில் உள்ள வெசூவியஸ் எரிமலை இங்குக் குறிப்பிடத்தக்கது. இதன் உச்சி எப்போதும் புகைந்துகொண்டே இருக்கும். கி.பி. 79-ல் வெசூவியஸ் வெடித்தபோது ஹெர்க்குலேனியம், பாம்ப்பியை, ஸ்ட்டேப்யீ என்ற மூன்று பெரிய இத்தாலிய நகரங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. சிசிலித் தீவில் உள்ள எட்னா, ஜப்பானில் உள்ள பூஜியாமா முதலியவை மற்ற முக்கியமான எரிமலைகளாகும்.


எருமை: இந்தியாவில் பழங்காலத்திலிருந்தே வீட்டில் எருமையை வளர்க்கிறார்கள். இந்தியாவிலிருந்துதான் இது எகிப்து, இத்தாலி, ஹங்கேரி முதலிய நாடுகளுக்குச் சென்றது.

எருமை உடல் பருத்திருக்கும். இதன் நிறம் கறுப்பு, கொம்புகள் நீண்டு அகன்று பின்னோக்கி வளர்ந்து இருக்கும். சேற்றிலும் நீரிலும் நெடுநேரம் புரள்வது இதற்கு மிகவும் விருப்பம். எருமைக்கடா பொதி சுமக்கவும், ஏர் உழவும், வண்டி இழுக்கவும் பயன்படுகிறது. எருமை நிறையப் பால் கொடுக்கும். இதன் பால் சத்து நிறைந்தது. இந்தப் பாலிலிருந்து வெண்ணெய் அதிகமாகக் கிடைக்கிறது. எருமையின் கெட்டியான தோல் செருப்பு, வார் முதலியன செய்ய உதவுகின்றது.

முர்ரா எருமை

இந்தியாவில் பலவகை எருமைகள் உள்ளன. இந்திய எருமைகள் மலேசியா, சீனா போன்ற கிழக்கு நாடுகளிலும் காணப்படுகின்றன. தென் ஆப்பிரிக்காவிலும், காங்கோவிலும், பிலிப்பீன், செலிபீஸ் முதலிய தீவுகளிலும் வெவ்வேறு வகை எருமைகள் வளர்க்கப்படுகின்றன. இந்தியக் காடுகளில் காட்டெருமை என்ற ஒருவகையும் உண்டு. இது புலியையும் எதிர்த்துப் போராடும் வலிமை கொண்டது. பார்க்க: காட்டெருமை; கால்நடை.


எல்லோரா: பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் குன்றுகளையும், பாறைகளையும் குடைந்து கோயில்களும், மண்டபங்களும் அமைத்தனர். தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி, கழுகுமலை, சிற்றண்ணல் வாயில் முதலிய இடங்களில் இவற்றைக் காணலாம். இத்தகைய குகைக் கோயில்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள எல்லோரா என்ற இடத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. இவை மிகவும் பெரியவை. மலை ஒன்றின் சரிவில், செங்குத்தான பாறைகளில் இக்குகைகளைக் குடைந்துள்ளனர். இவற்றுள் சில கோயில்கள் மிகவும் பழமையானவை. இவற்றைப் பௌத்தர்கள் அமைத்தனர். பிறகு இந்துக்கள் சில கோயில்களை உண்டாக்கினர். அவர்களை அடுத்துச் சமணர்களும் சிலவற்றை அமைத்தனர். எல்லோராக் குகைகள் யாவும் 4ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரையில் அமைக்கப்பட்டவை.

இக்குகைக் கோயில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாகக் குடையப்பட்டுள்ளன. இவற்றில் காணப்படும் சிற்பங்கள் எல்லாம் மிகமிக அழகாக உள்ளன. பத்தாம் குகை விசுவகருமர் குகை என்பது. இது கி.பி. 600-ல் குடையப்பட்டது: இது ஒரு பெரிய மண்டபம்போல உள்ளது. இதனுள் புத்தரின் பெரிய சிலை ஒன்று செதுக்கப்பட்டிருக்கிறது. பதினோராம் குகை மூன்று மாடிகளை உடையது. பன்னிரண்டாம் குகையில் புத்தரின் சிலைகள் பல உள்ளன. புத்தரின் தியான நிலையை இச்சிலைகள் காட்டுகின்றன.

சமணர் அமைத்த குகைக்கோயில்களில் இந்திரசபை என்பது ஒன்று. காண்போர் மனதைக் கவரும் அழகுடையது. மாபெரும் தூண்களின்மேல் சிற்ப வேலைப்பாடுகள் வியக்கத்தக்க விதத்தில் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள அம்பிகையின் வடிவம் ஒன்று மாமல்லபுரத்துச் சிற்ப முறையில் அமைத்தது போலவே காணப்படுகின்றது.

கைலாசம் என்றொரு குகைக் கோயில் உள்ளது. இதை அமைத்தவர் ராஷ்டிர-