பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.என்.அண்ணாதுரை

11


யல்லவா? அடி முட்டாளே ! கேள் ! உனக்குக் காதலைப் பற்றிக் கடுகுப் பிரமாணமும் தெரியாது. இப்போதாவது தெரிந்துகொள். என் சபதம் நிறைவேறிவிட்டது. அடுத்த வெள்ளிக்கிழமை எனக்குக் கலியாணம்! ஐயர் நுழையவே முடியாத இடத்தில், சிங்காரபுரிச் சேரியில உள்ள சீர்திருத்தச் சங்கத்திலே கலியாணம்! யார் தெரியுமா? என் மாமனாரைப் பார்த்தால், பக்தையான நீ கீழே விழுந்துவிழுந்து கும்பிடுவாய்; அவ்வளவு சிவப்பழமாக இருப்பார். தாழையூர் தனவணிகர் குழந்தைவேல் செட்டியார் என்றால் எந்தக் கோயில், அர்ச்சகரும், "மகா பக்திமானல்லவா" என்று ஸ்தோத்தரிப்பார்கள். அப்படிப்பட்டவர் தவம் செய்து பெற்ற பிள்ளைதாண்டி, என் கணவர்; பெயர், பழனி !

அவர், என்னை வெற்றிகொள்ள அதிகக் கஷ்டப் படவில்லை. எப்போதாவது ஒரு தடவை, சீர்திருத்தச் சங்கத்துக்கு வருவார்; அதிகம் பேசமாட்டார் ; மற்றவர்கள் பேசும்போது, மிகக் கவனமாகக் கேட்பார்; அதிலும் நான் பேசும்போது, ஆனந்தம் அவருக்கு. மெள்ள மெள்ள நான் அவரைச் சீர்திருத்தக்காரராக்கினேன். ஆரம்பத்தில் அவர் ஜாதிச் சண்டை, குலச் சண்டை கூடாது; வேறு வேறு ஜாதியாக இருந்தாலும், சண்டை சச்சரவு இல்லாமல் வாழவேண்டும் என்று மட்டுமே கூறிவந்தார். நாளாக நாளாக தீவிரவாதியானார். நான் என் பேச்சினால், அவரை வென்றுவிட்டேன்; அந்தப் பெருமையும் சந்தோஷமும் எனக்கு! அவரோ, தம் பார்வையாலேயே, என்னை வென்றுவிட்டார். குழந்தை போன்ற உள்ளம்