பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.என். அண்ணாதுரை

17


"அப்பா! நான் நாகவல்லிக்கு வாக்களித்து விட்டேன்."

"தகப்பன் உயிரை வாட்டுகிறேன் என்றா ?"

"இன்னும் ஒரு வாரத்தில் அவளைக் கலியாணம் செய்துகொள்வதாக."

"பழனி! நட, இந்த வீட்டைவிட்டு; என்னை, இதுவரை, சம்மதம் தரவேண்டுமென்று ஏன் கேட்டுக் கொண்டிருந்தாய்? அவளுக்கு வாக்குக் கொடுத்த போது, உன் புத்தி எங்கே போயிற்று? நான் ஒருவன் இருக்கிறேன் என்ற நினைப்புக்கூட இல்லை உனக்கு. இனி நீ என் மகன் அல்ல, நான் உனக்குத் தகப்பனல்ல. அடே பாவி! துரோகி! குலத்தைக் கெடுக்கப் பிறந்த கோடாரிக்காம்பே! என்னை ஏன் உயிருடன் வதைக்கிறாய்? நான் தூங்கும்போது பெரிய பாராங்கல்லை என் தலைமீது போட்டுச் சாகடித்துவிடக் கூடாதா? என் சாப்பாட்டிலே பாஷாணத்தைக் கலந்துவிடக் கூடாதா? என் பிணம் வெந்த பிறகு நீ அந்தக் கிருஸ்தவச்சியை மணம் செய்து கொள்ளடா, மகராஜனாக!"

"அப்பா! நான் இதுவரை தங்களிடம் இப்படிப்பட்ட கடுமையான பேச்சைக் கேட்டதில்லையே !"

"அடே ! பேசுவது நீ அல்ல ! போதையிலே பேசுகிறாய். நாகத்தைத் தீண்டியதால் மோகம் என்ற போதை உன் தலைக்கு ஏறிவிட்டது."

"மோகமல்ல அப்பா! காதல் ! உண்மைக் காதல்!"

"நாடகமா ஆடுகிறாய்?"

"என் உயிர் ஊசலாடுகிறதப்பா?

🞸 🞸 🞸

2