பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

161


விடியாததுமாகத் திடீரென்று தளபதி கோட்டைக்குள் வரவே அங்கிருந்த பலவகைப் படைகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் பரபரப்புக்கு உள்ளானார்கள். என்னவோ? ஏதோ ? படைத் தலைவருடைய திடீர் வருகையின் விளைவு யாதாயிருக்குமோ? என்று வீரர்கள் தங்களுக்குள் மெதுவாகப் பேசிக் கொண்டனர். நால்வகைப் பெரும்படைகளும், ஆயுதச் சாலைகளும், யானைகளும் குதிரைகளும் வரிசை வரிசையாகக் கட்டப்பட்டிருந்த கொட்டங்களும் நிறைந்த அப்பெரிய கோட்டையில் மிகச் சில விநாடிகளுக்குள் ஒரு புதிய சுறுசுறுப்புப் பரவி விட்டது. எதையோ எதிர்பார்த்து ஆவலோடு துடித்து நிற்கும் எழுச்சி ஏற்பட்டிருந்தது. தளபதியின் கீழ் உள்ள படை அணிகளின் தலைவர்களெல்லாம் விழிப்பும், தாக்கமும் ஒன்றோடொன்று போரிடும் சோர்ந்த கண்களோடு ஒடோடி வந்து அவனை வரவேற்றனர். அவனது கட்டளையை எதிர்நோக்கிக் கை கட்டிக் காத்து நின்றனர் அவர்கள்.

தளபதியின் கண்கள் அவர்களுள் யாரோ ஒருவரை மட்டும் குறிப்பிட்டுத் தேடுவதுபோல் சுழன்றன. ஒவ்வொரு வராகப் பார்த்துக் கொண்டு வந்த அவன் பார்வை ஆபத்துதவிகளின் படைக்குத் தலைவனான மகர நெடுங் குழைக்காதனின்மேல் ஒரு கணம் நிலைத்தது. அந்தப் பார்வையின் குறிப்பைப் புரிந்துகொண்டு ஓரிரு அடிகள் முன் வைத்து நடந்து வந்து வணங்கினான் மகர நெடுங்குழைக்காதன்.

“குழைக்காதரே! ஆபத்துதவிகள் படையைச் சேர்ந்த வீரர்களெல்லாம் கோட்டைக்குள்தானே இருக்கிறார்கள்?” என்று கேட்டார் தளபதி.

“ஆம்! எல்லோரும் கோட்டைக்குள்ளே இருக்கிறார்கள்?”

“நல்லது! மற்றவர்கள் போகலாம்! குழைக்காதரும் நானும் தனிமையில் சிறிது நேரம் பேசவேண்டும்.”

குழைக்காதனைத் தவிர அங்கு நின்றுகொண்டிருந்த மற்றவர்கள் வெளியேறினர். தென்னவன் ஆபத்துதவிகள் என்பார் படைகளுள் ஒரு முக்கியமான பிரிவினர். தென் பாண்டி நாட்டு அரசமரபினரின் உயிருக்குக் கவசம் போன்றவர். வெளிப்படையாகத் தெரிந்தோ, தெரியாமலோ ஆபத்துதவிகளின்