பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/646

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

644

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


“தளபதி படைகளை மட்டும் இப்போதே அவசரமாகக் கரவந்தபுரத்துக்கு அனுப்பு. நீ சிறிது பின்தங்கிப் போகலாம். எனக்கு உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும்” என்றார் மகாமண்டலேசுவரர். அவர் சொற்படியே தான் போகாமல், படைகளை மட்டும் அனுப்பிவிட்டு அவரைத் தனியே சந்தித்தான் தளபதி. மகாமண்டலேசுவரர் கண்கள் சிவக்க ஆத்திரத்தோடு அவனைப் பார்த்தார்.

“குமாரபாண்டியர் வந்து உன்னை விசாரித்துத் தீர்ப்புக் கூறுகிற வரையில் போருக்குத் தளபதியாக நீ தலைமை தாங்கி நிற்க விடமாட்டேன் நான். நீ குற்றவாளி. என் ஆணையை மீறி எனக்குத் தெரிந்தும் தெரியாமலும் பல சதிக் குற்றங்களை நீ செய்திருக்கிறாய்;” என்று திடீரென்று எரிமலை வெடித்தது போல் கடுங்குரலில் இரைந்தார் அவர் அறிவின் அடக்கத்தை மீறி அவர் ஆத்திரமாகப் பேசுவதை வல்லாளதேவன் அப்போதுதான் முதன்முறையாகக் கண்டான். அவனுடைய கண்களும் சினக்குறிப்புக் காட்டின. அவன் முகத்தில் கோபம் படர்ந்தது.


12. அறிவும் வீரமும்

படைகளைப் போர்முனைக்கு அனுப்பச் செய்கிறவரை தன்னிடம் கோபித்துக்கொள்ளாமல் தந்திரமாக நடந்து கொண்ட மகாமண்டலேசுவரர், காரியம் முடிந்ததும், அவ்வாறு கண்டிப்பும், கடுமையும் காட்டு வாரென்று தளபதி எதிர்பார்க்கவே இல்லை. பொங்கும் சினத்தோடு அவர் வாரி இறைத்த வரம்பு கடந்த ஆத்திரச் சொற்கள் அவனது இயற்கைக் குணமான முரட்டுத் தனத்தைக் கிளர்ந்தெழச்செய்தன. பழக்கப்படாத புதுப் பாகன் பயந்து கொண்டே பெரிய மதயானையை நெருங்குகிற மாதிரித் தயங்கும் மனத்தோடும், தயங்காமல் சிவந்து சினம் கனலும் கண்களோடும் மகாமண்டலேசுவரரைப் பார்த்தான் தளபதி. அந்தப் பார்வையைப் பொறுக்காமல் சீறினார் மகாமண்டலேசுவரர்.